தொடர் மழை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழுவதுமாக நிரம்பிய 101 ஏரிகள்

படம்: வி.எம்.மணிநாதன்
படம்: வி.எம்.மணிநாதன்
Updated on
1 min read

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 101 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக தொடர் மழை பெய்தது. மேலும், புயல் காரணமாக கடந்த 2 நாட்களில் பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதன்படி, மாவட்டத்தில் மொத்தம் 101 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 76 முதல் 99 சதவீதம் 6 ஏரிகளும், 51 முதல் 75 சதவீதம் 22 ஏரிகளும், 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை 104 ஏரிகளும், 25 சதவீதத்துக்கு குறைவாக 108 ஏரிகளும் நிரம்பின. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்த ஏரிகள் மூலமாக 8.52 டிஎம்சி நீர் சேமிக்க முடியும்.

தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 4.27 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. மேலும், தொடர் மழை காரணமாக பாலாறு அணைக் கட்டில் இருந்து மகேந்திர வாடிக்கு 100 கன அடி, காவேரிப்பாக்கத்துக்கு 497 கன அடி, சக்கரமல்லூருக்கு 94 கன அடி மற்றும் தூசி ஏரிக்கு 283 கன அடி என விநாடிக்கு 974 கன அடிநீர் ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மழை நிலவரம் (மி.மீ.,): மாவட்டத்தில் நேற்று முன் தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை அதிகபட்சமாக மின்னல் 104.1, வாலாஜாவில் 90.35, பனப்பாக் கத்தில் 82.2, சோளிங்கர் 68.6, காவேரிப்பாக்கத்தில் 66, அரக்கோணம் 61.4, பாலாறு அணைக்கட்டில் 57.4, ஆற்காடு 45.9, கலவை 40.4, ராணிப்பேட்டையில் 36 மி.மீ., மழை பதிவாகியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in