

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளன. மாவட்டத்தில் உள்ள 12 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகின்றன.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை மிக்ஜாம் புயலாக மாறி நேற்று காலை நெல்லூர் அருகே கரையை கடந்தது. மிக்ஜாம் புயல் காரணமாக, வேலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கி நேற்று அதிகாலை வரை பரவலான மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய, விடிய பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது.
வேலூர் கன்சால்பேட்டை, இந்திரா நகர், திடீர் நகர், முள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியது. தொடர் மழையால் மாவட்டத்திலுள்ள பல்வேறு ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளன. ஏற்கெனவே மாவட்டத்தில் உள்ள சில ஏரிகள் நிரம்பிய நிலையில் உபரி நீர் வெளியேறி வருகின்றன.
வேலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் மொத்தமுள்ள 101 ஏரிகளில் 12 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 3 ஏரிகள்51 முதல் 75 சதவீத அளவுக்கும், 18 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதம் வரையும், 39 ஏரிகள் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் தண்ணீர் நிரம்பியுள்ளன. 29 ஏரிகளுக்கு சிறிதுகூட தண்ணீர் வரத்து இல்லை.
இதேபோல், குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை மொத்தம் 37.72 அடி உயரம் கொண்ட நிலையில் தற்போதைய நீர் இருப்பு 37.39 அடியாக உள்ளது. ராஜாதோப்பு அணை மொத்தம் 24.57 அடி உயரம் உள்ள நிலையில் தற்போதைய நீர் இருப்பு 11.32 அடியாக உள்ளது.
இந்நிலையில், வேலூர் மாவட் டத்தில் நேற்று காலை 8 மணிநிலவரப்படி அதிகபட்சமாக பொன்னையில் 59.2 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. குடியாத்தம் 2, மேல்ஆலத்தூர் 2.4, மோர்தானா அணை 1.5, ராஜாதோப்பு அணை 32, கே.வி.குப்பம் 9.6, வேலூர் சர்க்கரை ஆலை 39.8, பேரணாம்பட்டு 1.4, வேலூர் ஆட்சியர் அலுவலகம் 25.3 மி.மீ., என மழை பதிவாகியுள்ளன.