Published : 31 Jan 2018 08:04 AM
Last Updated : 31 Jan 2018 08:04 AM

புதுச்சேரி பெண் தாதாவின் சொத்துகள் விரைவில் முடக்கம்?

புதுச்சேரியில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பிரபல பெண் தாதாவான எழிலரசியின் சொத்துகளை முடக்கம் பணி நடைபெற்று வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியின் முன்னாள் பேரவைத்தலைவர் விஎம்சி சிவக்குமார் கொலை வழக்கில் கைதான எழிலரசி புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அச்சிறையில் ஏற்கெனவே புதுச்சேரி பிரபல தாதா மணிகண்டனும் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆண், பெண் சிறைகள் தனித்தனியாக இருந்தாலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எழிலரசியும், மணிகண்டனும் சிறையில் சந்தித்து பேசி வந்ததாக புகார் எழுந்தது. இதற்கு சிறையில் உள்ள அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்பட்டது. இவ்விவகாரம் வெளியில் கசிந்ததையடுத்து 4 சிறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் சிறையில் இருந்த எழிலரசி ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், தனது கணவர் ராமு கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கொலை செய்ய ரவுடி மணிகண்டன் உதவியை எழிலரசி நாடி, இதற்காக சிறையில் சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. மணிகண்டன் சிறையில் இருந்ததால் அவரது மகன் டேவிட்டின் ஆதரவு ஜாமீனில் வெளியே வந்த எழிலரசிக்கு கிடைத்துள்ளது. இதில் கொலைத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

சிறைக்குள் கண்காணிப்பு

நட்சத்திர ஹோட்டலில் பிறந்தநாள் விழா நடத்துவதுபோல் ரவுடிகளை ஒருங்கிணைத்துள்ளனர். அங்கு, வக்கீல் ஆனந்த் என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டும்போது ரவுடி மணிகண்டனின் ஆதரவு ரவுடிகள் 14 பேருடன் எழிலரசி கைதாகியிருக்கிறார். தற்போது மீண்டும் புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழரசி சிறையில் அடைக்கப்பட்டாலும், அவர் குறி வைத்துள்ளவர் மீது கொலை முயற்சி நடக்க வாய்ப்புள்ளதாக கருதி போலீஸார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அதேபோல் சிறையிலும் எழிலரசியின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

சொத்துகள் முடக்கம்?

இந்நிலையில், புதுச்சேரி எஸ்.எஸ்.பி ராஜீவ்ரஞ்சன் ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்காக அவர்களது சொத்துகளை முடக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவ்வரிசையில் விரைவில் எழிலரசியின் சொத்துகளையும், வங்கி கணக்கையும் முடக்கும் பணி நடைபெறுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், எழிலரசி ஜாமீன் பெறுவதை தடுக்கும் முயற்சியிலும் போலீஸார் இறங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x