

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான அஸ்வின், மிக்ஜாம் புயல் காரணமாக தனது பகுதியில் 30 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இல்லை என எக்ஸ் சமூக வலைதளத்தில் ட்வீட் செய்துள்ளார்.
“எனது பகுதியில் 30 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இல்லை. பல்வேறு இடங்களில் இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். நமக்கு வேறு வழி என்ன இருக்கிறது என உறுதியாக தெரியவில்லை” என அஸ்வின் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் 30+ மணி நேரத்துக்கு மேலாக வேளச்சேரி பகுதியில் மின்சாரம் இல்லை என தெரிவித்திருந்தார். அதனை ரீ-ட்வீட் செய்த அஸ்வின் இதை தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல், ஆந்திராவில் கரையை கடந்துள்ளது. தமிழகத்தின் வடக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பதிவானது. சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. ஆங்காங்கே வெள்ள நீர் வடிந்து வருகிறது. நீர் தேங்கி உள்ள பகுதிகளில் நீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.