சென்னை வெள்ளம் | பேரிடர் பாதிப்புகளை விரைந்து களைய திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்
முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: மிக்ஜாம் புயல் மழை பாதிப்பு மீட்பு பணிகளில் ஈடுபட திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார்.

“அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் நம்மைச் சூழ்ந்திருக்கும் மிக்ஜாம் புயல் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களையப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். களத்தில் இறங்கி உதவிகள் செய்து கொண்டிருக்கும் கழகத்தினருடன், இன்னும் பல தோழர்கள் உடனே தோள் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பாதிப்புகளில் இருந்து மீண்ட பகுதிகளைச் சேர்ந்த கழகத் தோழர்கள் விரைந்து வாருங்கள்” என முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல், ஆந்திராவில் கரையை கடந்துள்ளது. தமிழகத்தின் வடக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பதிவானது. சென்னை நகரின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. ஆங்காங்கே வெள்ள நீர் வடிந்து வருகிறது. நீர் தேங்கி உள்ள பகுதிகளில் நீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in