Published : 05 Dec 2023 08:15 PM
Last Updated : 05 Dec 2023 08:15 PM

“ரூ.4,000 கோடி திட்டம் என்ன ஆனது?” - இபிஎஸ் கேள்வி @ சென்னை வெள்ளம்

சென்னை: “முதல்வரும், திமுக அமைச்சரும், சுமார் ரூ.4,000 கோடியில் சென்னை மாநகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்திருக்கிறோம். மழை பெய்தால் சொட்டு தண்ணீரும் தேங்காது என வீர வசனம் பேசினார்கள். ஆனால், சென்னை மாநகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆக, ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்தும் ஏன் தண்ணீர் வடியவில்லை?” என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தொடர் கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கனமழை குறித்த முன்னெச்சரிக்கை கூட்டங்கள் அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்டன. அதிமுக ஆட்சியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படும். ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். மழைநீர் வடிகால் பகுதிகளை தூர்வாருதல், அடைப்புகளை நீக்குதல் என அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகளால் மழை பெய்யும் காலங்களில் தண்ணீர் தேங்காமல் மக்கள் பாதிக்கப்படாமல் இருந்தார்கள். மழைநீரும் உடனுக்குடன் அக்கற்றப்பட்டது.

ஆனால், திமுக ஆட்சியில் நேற்றுதான் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டது வேடிக்கையாக இருக்கிறது. கடந்த கால அதிமுக ஆட்சியில் ஒரு மாதத்துக்கு முன்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆனால், இன்று திறமையில்லாத பொம்மை முதலமைச்சர் இந்தப் பணியை மேற்கொள்ளாத காரணத்தினால் இன்றைக்கு மக்கள் இந்த இரண்டு நாள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒரு வாரமாக இந்திய வானிலை ஆய்வு மையம் காற்றுடன் புயல் வரும், மழையும் பெய்யும் என அறிவித்துக்கொண்டிருந்தது. அதையாவது இந்த அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருந்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். ஒரு வாரமாக நிர்வாகத் திறமையற்ற இந்த அரசு சரியான முறையில் பணிகளை மேற்கொள்ளாத காரணத்தினால் சென்னை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மக்கள் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர்.

அதிமுக ஆட்சியில் தண்ணீர் தேங்கிய பகுதிகள் கண்டறியப்பட்டு ராட்சத மோட்டார்கள் மூலம் நீர் வெளியேற்றப்படும். ஆனால், நேற்று இரவு தலைமைச் செயலாளர் கொடுத்த பேட்டியில், ‘மழை விட்ட பிறகு தண்ணீரை அப்புறப்படுத்த என்எல்சி நிறுவனத்திடமிருந்து ராட்சத மோட்டார்களை வாங்குவோம்’ என்கிறார். என்றைக்கு மோட்டார் வாங்கி, என்றைக்கு பொருத்தி, என்றைக்கு தண்ணீரை வெளியேற்றப்போகிறார்கள். அதுவரை மக்கள் கஷ்டப்பட வேண்டுமா? திட்டமிட்டு செயல்படாத அரசு என்பது நிரூபணமாகியுள்ளது.

புயலோ, வெள்ளமோ வரும்போது அதிமுக ஆட்சியில் மக்களுக்கு தக்க ஆலோசனை வழங்கப்படும். மக்கள் தங்களுக்கு தேவையான உணவுகள், பால், ப்ரெட், டார்ச் லைட், மெழுகுவர்த்தி, தண்ணீர் வாங்கி வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படும். ஆனால், இந்த திமுக அரசு மக்களுக்கு எந்த ஆலோசனையும் வழங்காததால், மக்கள் உணவுக்கு வழியில்லாமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர்.

முதல்வரும், திமுக அமைச்சரும், சுமார் ரூ.4 ஆயிரம் கோடியில் சென்னை மாநகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்திருக்கிறோம். மழை பெய்தால் சொட்டு தண்ணீரும் தேங்காது என வீர வசனம் பேசினார்கள். ஆனால், சென்னை மாநகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மக்கள் இதையெல்லாம் பார்த்துகொண்டிருக்கிறார்கள். ஆக ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்தும் ஏன் தண்ணீர் வடியவில்லை? என மக்கள் கேட்கின்றனர். இந்தத் திட்டத்தை கொண்டு வந்தது நாங்கள்தான். கமிஷன் வாங்கி கொண்டு முறையாக பணிகளை மேற்கொள்ளாத திமுக அரசால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காட்சியளிக்கிறது.

முகாமில் உள்ளவர்கள் யாரும் எங்களை யாரும் வந்து பார்க்கவில்லை என்கிறார்கள். இந்த அரசு எல்லாத்தையும் செய்துவிட்டதாக நாடகமாடிக் கொண்டிருக்கிறது. மாந்தோப்பு முகாமில் மக்களுக்கு பெட்ஷீட், பாய் என எதையுமே கொடுக்கவில்லை. இந்த ஆட்சியில் ஒன்றுமே இல்லை. முதல்வர் பேட்டியில் செயற்கை வெள்ளம், இயற்கை வெள்ளம் என கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார். அவருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். நான் எங்கையும் இப்படியான செயற்கை, இயற்கை வெள்ளத்தை பார்த்ததில்லை. முதல்வருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.

செம்பரம்பாக்கம் ஏரியில் 35 ஆயிரம் கன அடி தான் திறக்க முடியும். இப்போதும் நீங்கள் சென்று பார்க்கவில்லை என்றால் முதல்வராக இருக்க தகுதியேயில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளிலிருந்து வந்த உபரி நீர் தான் வெள்ளப்பெருக்கு காரணம். இது கூட தெரியாத பொம்மை முதல்வர் ஸ்டாலின். இனியாவது போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு மக்களை இந்த அரசு காப்பாற்ற வேண்டும்” என்று இபிஎஸ் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x