Published : 14 Jan 2018 09:37 AM
Last Updated : 14 Jan 2018 09:37 AM

வடமாநிலங்களைச் சேர்ந்த ஏடிஎம் கொள்ளையர் 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது

ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த, வடமாநில கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 8 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கோவை பீளமேடு அவிநாசி சாலை பகுதியில் டிச. 10-ல் அதிகாலை 3 தனியார் வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் புகுந்த கும்பல், 2 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ.30 லட்சத்தைக் கொள்ளையடித்தது. 3-வது ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியவில்லை.

இது தொடர்பாக கோவை மாநகர போலீஸார் விசாரணை நடத்தியதில், கேஸ் வெல்டிங் இயந்திர உதவியுடன் ஏடிஎம்-களை உடைத்து, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. அந்த மையங்களில் இருந்த கண்காணிப்புக் கேமராக்கள் மீது கருப்பு நிற பெயின்ட் அடித்தும், அவசரகால அலாரத்தை செயலிழக்கச் செய்தும் துல்லியமாக கொள்ளை நடந்தது.

இதையடுத்து, மாநகர காவல் ஆணையர் கே.பெரியய்யா உத்தரவின்பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த கொள்ளை தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த 3 பேர், ஹரியாணாவைச் சேர்ந்த 3 பேர், டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மோசம்கான், அமீர், ஜுல்பிகர், அமித்குமார், சுபேர், முபாரக், முஸ்டாக், சுபைர் ஆகியோர் மீது பல்வேறு மாநிலங்களில் நடந்த ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, கொள்ளையர்கள் 8 பேரையும், பீளமேடு காவல் ஆய்வாளர் அன்பரசு பரிந்துரையின்பேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையர் பெரியய்யா நேற்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x