மிக்ஜாம் புயல் | தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக ரூ.5,000 கோடி வழங்க நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா வலியுறுத்தல்

திமுக எம்.பி. திருச்சி சிவா
திமுக எம்.பி. திருச்சி சிவா
Updated on
1 min read

புதுடெல்லி: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக ரூ.5,000 கோடி வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. இந்த நிலையில், முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின், 'மிக்ஜாம்' புயல் மீட்பு பணிகளுக்காக ரூ.5,000 கோடி நிவாரண நிதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாகவும், இதுகுறித்து மாநிலங்களவையில் எம்.பி.கள் கேள்வி எழுப்புவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், திமுக எம்.பி. திருச்சி சிவா இது குறித்து மாநிலங்களவையில் பேசியதாவது," சென்னையில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சாலைகள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு அத்தியாவசிய சேவைகளைக் கூட வழங்க முடியாத சூழல் இருக்கிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சரவையும், மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர், துப்புரவுப் பணியாளர்கள், மருத்துவர்கள், மீட்புக் குழுவினர், மின்சாரத் துறையினர் மக்களை மீட்கவும், நிவாரணப் பொருட்களை வழங்கவும் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் 5 மாவட்டங்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, ஆரம்பக் இடைக்கால நிவாரண நிதியாக (initial interim relief) ரூ.5,000 கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in