லஞ்சம் பெற்ற வழக்கு | அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி

லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி | கோப்புப்படம்
லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி | கோப்புப்படம்
Updated on
1 min read

திண்டுக்கல்: லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிபவர் மருத்துவர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. ஆனால், இந்த வழக்கில் இருந்து சுரேஷ்பாபு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், இந்த வழக்கை மீண்டும் எடுத்து விசாரிக்க இருப்பதாகவும், அப்படி விசாரிக்காமல் இருக்க வேண்டுமானால் ரூ.3 கோடி லஞ்சம் தரவேண்டும் என்றும் அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. முடிவாக, ரூ.51 லட்சம் தருவதற்கு மருத்துவர் சுரேஷ்பாபு ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

இதற்கான முதல் தவணையாக அமலாக்கத் துறை அதிகாரியிடம் கடந்த மாதம் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது. இந்நிலையில், 2-வது தவணையாக ரூ.20 லட்சம் வழங்குவதற்காக அமலாக்கத் துறை அதிகாரி சொன்னபடி திண்டுக்கல் புறவழிச்சாலை பகுதியில் உள்ள ஓட்டல் அருகே மருத்துவர் சுரேஷ்பாபு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த அமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

இதற்கிடையே, திண்டுக்கல் மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் ஏற்கெனவே லஞ்சமாக பெற்ற ரூ.20 லட்சத்தில் சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் சிலருக்கும் அன்கித் திவாரி பிரித்துக் கொடுத்துள்ளார் என்பது லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, அமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரி பணியாற்றும் மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாகத் துறையின் உதவி மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி அன்கித் திவாரி திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி மோகனா முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்பு போலீஸார் தரப்பில், இந்த வழக்கின் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், மனுதாரருக்கு ஜாமீன் வழங்க கூடாது என வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அன்கித் திவாரி ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in