

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, சென்னைக்கு தொண்டர்கள் வருவதை தவிர்க்க வேண்டுமென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலையொட்டி நேற்று முன்தினம் முதல் சென்னையில் கனமழை பெய்து வருவதால் ஜெயலலிதாவின் தொண்டர்கள் சென்னைக்கு வரும்பயணத்தை தவிர்க்க வேண்டுமென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில், “மிக்ஜாம் புயல் காரணமாக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாளை(இன்று) சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்துவரும் நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்களது பயணத்தை தவிர்க்க வேண்டும். மாறாக அவரவர் இடங்களில் இருந்தே ஜெயலலிதாவின் திருவுருவ படத்துக்கு மரியாதை செலுத்தலாம்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கை: மிக்ஜாம் புயலால் மறைந்த முன்னாள்முதல்வர் ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு நாளில், அவரது நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறாது என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொண்டர்களும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெளியூரில் இருந்து சென்னைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு சசிகலா தெரிவித்துள்ளார்.