

கோவை / உடுமலை: சென்னை மற்றும் அதை யொட்டிய மாவட்டங்களில், ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்து பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. தவிர, குப்பை, சாக்கடை கழிவுகளும் தேங்கிக் காணப்படுகின்றன.
இந்நிலையில், தூய்மைப் பணி மேற்கொள்ள கோவையில் இருந்து ஒரு குழுவினர் நேற்று சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது, ‘‘கோவை மாநகராட்சியில் இருந்து 400-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், 20 தூய்மைப் பணி கண்காணிப் பாளர்கள் ஆகியோர் 10 பேருந்துகள் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். தவிர, 5 லாரிகளும் சென்னைக்கு அனுப்பப் பட்டுள்ளன.
சீரமைப்புப் பணிக்கு தேவையான உபகரணங்களையும் தங்களுடன் எடுத்துச் சென்றுள்ளனர். மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், துணை ஆணையர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் குழுவினர் தூய்மைப் பணியாளர்களை வழியனுப்பி வைத்தனர்’’ என்றனர். இதேபோல், உடுமலை நகராட்சி சார்பில் 50 தூய்மைப் பணியாளர்கள் அரசு பேருந்தில் சென்னை புறப்பட்டு சென்றனர். அவர்களை நகராட்சி தலைவர் மு.மத்தீன் வழியனுப்பி வைத்தார்.