

புதுச்சேரி: மிக்ஜாம் புயலையொட்டி, ஆந்திரத்தையொட்டியுள்ள புதுச்சேரி பிராந்தியத்துக்கு உட்பட்ட ஏனாம் நிர்வாகத்துக்கு உதவுமாறு அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. இதில் புதுச்சேரி,காரைக்கால் தமிழகத்தையொட்டியும், மாஹே கேரளத்தையொட்டியும், ஏனாம் ஆந்திரத்தையொட்டியும் அமைந்துள்ளன.
தற்போதைய புயலால் புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் கடுமையாக பாதிக்கும் சூழல் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையடுத்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்:
இந்திய வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி சென்னை- மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் மிக்ஜாம் புயலால் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டப் பகுதி அருகேயுள்ள புதுச்சேரி ஒன்றியத்துக்குட்பட்ட ஏனாம் பிராந்தியம் அதிகளவில் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மிக்ஜாம் புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 90 கி.மீ வேகம் முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
ஏனாம் பகுதியில் புயல் பாதிப்பைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை புதுவை மாநில அரசு உத்தரவின் பேரில் ஏனாம் பிராந்திய நிர்வாக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இருந்த போதிலும், ஆந்திர அரசு ஏனாம் நிர்வாகத்துக்கான உதவிகளை வழங்க வேண்டும். கோதாவரி மாவட்ட நிர்வாகம் ஏனாம் பிராந்திய நிர்வாகத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கான உத்தரவை முதல்வர் பிறப்பிக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் புதுச்சேரியில் நேற்று கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. கடற்கரைச் சாலையில் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை பகுதியில் கடல் சீற்றம் குறித்தும்,
கடல் அரிப்பு உள்ளதா என்றும் முதல்வர் ரங்கசாமி நேற்று மதியம் நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் அரசு கொறடா ஆறுமுகம், ரமேஷ் எம்எல்ஏ உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.