

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக பெய்தகனமழையால் முகப்பேர் மேற்குநொளம்பூர், மேல் அயனம்பாக்கம், அத்திப்பட்டு, அயப்பாக்கம் பகுதிகளில் மழைநீரால் சூழ்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு பெய்ய ஆரம்பித்த தொடர் கனமழை காரணமாக அம்பத்தூர் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், முகப்பேர், நொளம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக மேல் அயனம்பாக்கம் பிரதான சாலைக்கு அத்திப்பட்டு ஐசிஎப் காலனியில் இருந்து ராம்பூர்ணம் நகர் வழியாக செல்லும் சிமென்ட் சாலை முற்றிலுமாக மழைநீர் சூழ்ந்து அப்பாதை முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
அத்திப்பட்டு ஜேஆர் கேஸில் குடியிருப்பு பகுதிகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. பலத்த சூறாவளிக் காற்றால் இப்பகுதி குடியிருப்புகளில் இருந்த வாழை மரங்கள் சாய்ந்தன. தரைத்தளத்தில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கார்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் வாகனங்களின் உரிமையாளர்கள் அவசர கதியில் தங்களது வாகனங்களை மேடான பகுதிகளுக்கு எடுத்துச் சென்றனர். புயல் மற்றும் மின்தடை காரணமாகக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் பால், முட்டை, பிரட்போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.