

விழுப்புரம்: மரக்காணம் அருகே வெள்ளப்பெருக்கால் 20 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மரக்காணம் அருகே ஆத்திகுப்பம், வண்டிபாளையம் கிராமங்களுக்கு இடையே பக்கிங்காம் கால்வாய் அமைந்துள்ளது.
இக்கால்வாயில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப் பாலம் உள்ளது. இந்த தரைப் பாலத்தை பயன்படுத்தி தான் சுமார் 10 கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் புதுச்சேரி, மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். தற்போது பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப் பெருக்கால் ஆத்திகுப்பம் - வண்டி பாளையம் கிராமங்களுக்கு இடையில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் தரைப்பாலம் முற்றிலும் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள பொது மக்கள் சுமார் 10 கி.மீ தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் தற்போது 2-வது முறையாக ஓங்கூர் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப் பெருக்கால் மண்டகப்பட்டு - காணிமேடு கிராமங்களுக்கு இடையேயான சுமார் 10 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது. இக்கிராம மக்கள் சுமார் 15 கி.மீதூரம் சுற்றிக் கொண்டு மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.