பாலமேடு ஜல்லிக்கட்டில் பெயர் பதிவு செய்ய கடும் போட்டி: 1500-க்கும் மேற்பட்ட வீரர்கள் திரண்டனர்- நெரிசலை கட்டுப்படுத்த போலீஸ் தடியடி

பாலமேடு ஜல்லிக்கட்டில் பெயர் பதிவு செய்ய கடும் போட்டி: 1500-க்கும் மேற்பட்ட வீரர்கள் திரண்டனர்- நெரிசலை கட்டுப்படுத்த போலீஸ் தடியடி
Updated on
1 min read

பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக மாடுபிடி வீரர்களிடையே கடும் போட்டி நிலவியது. தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய 1,500-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டது. அதை கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர். இதில் 2 பேர் காயமடைந்தனர்.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வரும் 14-ம் தேதியும், பாலமேட்டில் 15-ம் தேதியும்,அலங்காநல்லூரில் 16-ம் தேதியும் ஜல்லிகட்டு நடைபெற உள்ளது. இதற்காக மேடை, வாடிவாசல், இரண்டு அடுக்கு தடுப்பு வேலி, பார்வையாளர் கேலரி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகின்றன.

பாலமேடு ஜல்லிகட்டில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களைப் பதிவு செய்து, அடையாள அட்டை நேற்று வழங்கப்பட்டது. இந்த அட்டை இருப்பவர்கள் மட்டுமே காளைகளை அடக்க அனுமதிக்கப்படுவர்.

இதை பெறுவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,500-க்கும் அதிகமான இளைஞர்கள் நேற்று அதிகாலையே பாலேமேடு சமுதாயக் கூடம் முன்பு திரண்டனர். வரிசையில் நிற்பதில் ஏற்பட்ட போட்டியில் இளைஞர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஒருவர் மீது மற்றொருவர் விழுந்து சிக்கும் அபாயம் உருவானது. கூட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் தடியடி நடத்தினர். இதில் 2 இளைஞர்கள் காயமடைந்தனர்.

1,150பேருக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. வாடிப்பட்டி வட்டாட்சியர் பார்த்திபன், வட்டார மருத்துவர் வளர்மதி ஆகியோர் முன்னிலையில் உடல் தகுதித் திறன் தேர்வு நடந்தது. அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காளைகள் மற்றும் வீரர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகளில் கியூஆர் அடையாள கோடுகளுடன், ஒளிரும் ஹாலோகிராம் ஸ்டிக்கரும் ஒட்டப்பட உள்ளது. பதிவு பெற்ற காளைகள், மாடுபிடி வீரர்களை ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் கணினி மூலம் சரிபார்த்த பிறகே அனுமதிக்கப்படுவர். போலி அட்டைகள், கலர் ஜெராக்ஸ் ஆகியவற்றை பயன்படுத்துவதை தடுக்க இதுபோன்ற முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வர உள்ளனர். இதனால் ஆட்சியர் வீரராகவ ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் அலங்காநல்லூர் வாடிவாசல், விஐபிக்கள் அமரும் மேடை, பார்வையாளர் மாடம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அமரும் இடம், பாதுகாப்பு தடுப்புவேலி அமைய உள்ள இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பாலமேட்டில் காளைகளுக்கும், அலங்காநல்லூரில் மாடுபிடி வீரர்களுக்கும் இன்று முன்பதிவு நடைபெற உள்ளது. அலங்காநல்லூரில் காளைகள் முன்பதிவு நாளை (13-ம் தேதி) நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in