

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் மிக் ஜாம் புயல் காரணமாக மொத்தம் 85 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
வடகிழக்கு பருவமழை மற்றும் நிக்ஜாம் புயல் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர் மழையால் நீர்வரத்துக் கால்வாய் மூலமாக பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
அதன்படி, மாவட்டத்தில் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்தம் 369 ஏரிகளில் 85 ஏரிகள் முழுமையாக நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே சமயம் நேற்றைய நிலவரப்படி பாலாறு அணைக்கட்டில் இருந்து மகேந்திரவாடிக்கு 89 கனஅடி, காவேரிப்பாக்கம் 173 கனஅடி, சக்கரமல்லூர் 65 கன அடி மற்றும் தூசி 172 கனஅடி என ஏரிகளுக்கு மொத்தம் விநாடிக்கு 637 கனஅடி நீர் ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்டு வருகின்றன.
நீரில் மூழ்கிய பயிர்கள்...: தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி, காவேரிப்பாக்கம், சிறுவளையம், ஆற்காடு, சோளிங்கர் உட்பட பல்வேறு இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வேளாண்மை துறையின் நேற்று கணக்கெடுப்பின்படி நெல், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் என மொத்தம் சுமார் 528 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
அதேபோல், தோட்டக்கலை துறை பயிர்களான மிளகாய் நாற்று, கீரைகள், வெண்டை, கத்திரிக்காய் உட்பட பல்வேறு காய்கறிகள் என சுமார் 444 ஏக்கருக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதில், 419 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நிலத்தில் நீர் வடிவதற்கும், பயிர்களை காக்கவும் விவசாயிகள் மற்றும் வேளாண்மை துறை அதி காரிகள் உரிய நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றனர்.
மழை நிலவரம் (மி.மீ.,): ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் காலை 6 முதல் நேற்று காலை 6 மணி வரை மின்னல் 81.3, அரக் கோணம் 81, சோளிங்கர் 49.2, காவேரிப்பாக்கம் 49, பனப்பாக்கம் 47.6, கலவை 27.2, ஆற்காடு 23.7, வாலாஜா 22.3, பாலாறு அணைக் கட்டு 21.3, அம்மூரில் 19 மி.மீ, மழை பதிவாகியுள்ளன.
மேலும், மாவட்டத்தில் மழை காரணமாக 11 குடிசை வீடுகள், 16 ஓட்டு வீடுகள் சேதமடைந் துள்ளன. கால்நடையில் பசு ஒன்று உயிரிழந்துள்ளது. மனித உயிரிழப் புகள் ஏதுவுமில்லை என பேரிடர் மேலாண்மை துறை தரப்பில் தெரி விக்கப்பட்டது.