

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை மற்றும் புயல் காரணமாக முகாம்களில் தங்கியுள்ள 114 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக நீர் நிலைகள் மற்றும் ஏரி கரையோரம் தங்கியிருந்த இருளர், நரிக் குறவர்கள், பழங்குடியினர் மற்றும் பொது மக்களை மீட்டு மாவட்ட நிர்வாகம் உத்தரவின் படி அருகில் உள்ள முகாம்களில் தங்கி வைக்கப்பட்டுள்ளனர்.
சோளிங்கர், நெமிலி, காவேரிப்பாக்கம், அரக்கோணம், வாலாஜா உட்பட பல்வேறு பகுதிகளில் மொத்தம் 114 குடும்பங்கள் 14 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை, கைத் தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று பார்வையிட்டார். அவர்களுக்கு தேவையான மொத்தம் 300 பாய், போர்வை மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர் மற்றும் 15 கிலோ அரிசி ஆகியவற்றை தனது சொந்த செலவில் வழங்கினார்.
மேலும், அரசு சார்பில் முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். அப்போது, மாவட்ட ஆட்சியர் வளர்மதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் பாத்திமா, மனோன்மணியம் உட்பட பலர் உடனிருந்தனர்.