

சென்னை: “இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும்” என மிக்ஜாம் புயல் குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும். இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம். புயல் ஏற்படுத்திய கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும்படி மக்கள் நீதி மய்யத்தின் உறவுகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.
இன்று இரவு 12 மணிக்கு மேல் சென்னையில் மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் களப்பணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.