மிக்ஜாம் புயல் | “மழை நின்றதும் மின்சாரம் விநியோகிக்கப்படும்” - அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை: “மழை நின்றதும் மின்சாரம் சீராக விநியோகிக்கப்படும்” என மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “கனமழையின் காரணமாக சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதன் வாயிலாக மின்சாரம் பாய்ந்து எந்த அசம்பாவிதங்களும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு கருதி சில இடங்களில் மின்சாரத்தை நிறுத்தி வைத்துள்ளோம்.
மழை நின்றதும், மழை நீர் வடிந்ததும் உடனடியாக மின்சாரம் சீராக விநியோகிக்கப்படும். சென்னையில் மரங்கள் விழுந்துள்ளதால் மின்கம்பிகள் சேதாரமடைந்துள்ளன. அதனை சரி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
அத்தியாவசிய தேவையை தவிர, பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்துகொள்ள வேண்டும். மின்சாதனங்களை கவனமாக கையாள வேண்டும். வெளியில் மின்கம்பங்களுக்கு பக்கத்திலோ, மழை தேங்கியிருக்கும் பகுதியில் நடந்து செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
