சென்னை பெருமழை | செம்பரம்பாக்கம் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை பெருமழை | செம்பரம்பாக்கம் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Updated on
1 min read

சென்னை: மிக்ஜாம் புயலால் சென்னையில் கடந்த 12 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்துள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் சூழலில் பகல் 12.30 மணியில் இருந்து ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 6000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை குறிப்பிட்ட அளவில் பகிர்ந்து 6000 கன அடி உபரி நீரை வெளியேற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சென்னையைச் சுற்றியுள்ள நீர்தேக்கங்களில் 98% நிரம்பிவிட்டதால் நீர் திறப்பு குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் நீர்வளத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
சென்னையைச் சுற்றியுள்ள செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி உள்ளிட்ட 6 நீர்தேக்கங்களின் 98 சதவீதம் நீர் நிரம்பிவிட்டதாக நீர்வளத் துறை கூடுதல் செயலர் தெரிவித்துள்ளார். மேலும் நீர் திறப்பு தொடர்பாக மக்களுக்கு தொலைபேசி குறுந்தகவல் மூலம் தகவல் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சென்னை அடையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் கரையோர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜாஃபர்கான்பேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்: மிக்ஜாம் புயலானது நாளை முற்பகல் ஆந்திர மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் சூழலில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளையும் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளரின் அறிவுறுத்தல்: சென்னையில் 12 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை தொடர்வதால் பொதுமக்கள் முடிந்தவரை வீட்டிலேயே பத்திரமாக இருக்கும்படி தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், ”சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் 1000க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை மட்டுமே 2 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அரசு முழுவீச்சில் இயங்கிக் கொண்டிருக்கிறது” என்றார்.

சென்னையில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் நாளை நடக்க இருந்த செம்ஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் கல்வி நிலையங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in