Published : 04 Dec 2023 05:23 AM
Last Updated : 04 Dec 2023 05:23 AM
ராமேசுவரம்: அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்படும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் தீர்த்தங்கள் நேற்று அனுப்பிவைக்கப்பட்டன.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் 2024 ஜனவரி 22-ம்தேதி குழந்தை ராமர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. தொடர்ந்து, ஜன. 24-ம் தேதி முதல் ராமர் கோயிலில் வழிபாடு நடத்த பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதையொட்டி, உலகெங்கிலும் இருந்து பல்வேறு விதமான புனிதப்பொருட்களை ராமர் கோயிலுக்கு பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், ராமேசுவரத்திலிருந்து விஷ்வ இந்து பரிஷத் சார்பில் புனித தீர்த்தங்களை அயோத்திக்கு அனுப்பும் வைபவம் ராமகிருஷ்ண மடத்தில் நேற்று நடைபெற்றது. ராமநாத சுவாமி கோயிலுக்குத் தொடர்புடைய 22 தீர்த்தங்களில் சேகரிக்கப்பட்ட புனிதநீருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, விஷ்வ இந்து பரிஷத் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன், விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட துணை தலைவர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், இந்த புனித நீர் அடங்கிய கலசங்கள் அயோத்திக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT