Published : 02 Apr 2014 03:23 PM
Last Updated : 02 Apr 2014 03:23 PM

மே 9-ல் பிளஸ் 2 தேர்வு முடிவு; மே 23-ல் எஸ்எஸ்எல்சி முடிவு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதியும் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் மே 23-ம் தேதியும் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடந்தது. தனித்தேர்வர்கள் உள்பட 8.45 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர்.

விடைத் தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் 66 மையங்களில் மார்ச் 21-ம் தேதி தொடங்கியது. இந்தப் பணி வரும் 9-ம் தேதி முடிவடைகிறது. மதிப்பீட்டு பணியில் சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

10-ம் வகுப்பு தேர்வு

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 26-ல் தொடங்கியது. தனித் தேர்வர்கள் உள்பட மொத்தம் 11 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதி வருகின்றனர். இதுவரை மொழித்தாள், ஆங்கில தேர்வுகள் முடிந்துள்ளன. வரும் 9-ம் தேதி தேர்வு முடிவடைகிறது. அதற்கு அடுத்தநாளே 70-க்கும் அதிகமான மையங்களில் விடைத் தாள் திருத்தும் பணி தொடங்கி 19-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இப்பணியில் 50 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

முன்கூட்டியே அறிவிப்பு

வழக்கமாக பிளஸ் 2 மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் முடிவடைந்ததும் முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து செய்தி ஊடகங்களில் மாறுபட்ட தகவல்கள் வந்த வண்ணம் இருக்கும். இதனால், தேர்வு எழுதிய மாணவர்களும் பெற்றோரும் குழப்ப நிலைக்கு ஆளாவர். தேர்வு முடிவு வெளியிடப்படுவற்கு ஒருசில நாட்கள் முன்னதாகத்தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

இதுவரை இல்லாத வகையில், இந்த ஆண்டு முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. பிளஸ்-2 தேர்வு மதிப்பீட்டு பணிகள் மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வு நடந்து வரும் சூழலில் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு முடிவுகள் எப்போது?

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த மார்ச் 3-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். இதேபோல், மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி முடிவடைகிற 10-ம் வகுப்பு தேர்வு முடிவு மே 23-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள் வதற்கான இணையதள முகவரி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.

புதிய நடைமுறைகள்

இந்த ஆண்டு பிளஸ் 2 மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வில் பல்வேறு புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. விடைத் தாளில் மாணவர்கள் புகைப்படம், ரகசிய குறியீடு (ஃபார்கோடு), விடைத்தாள் பக்கங்களின் எண்ணிக்கை குறைப்பு, வினாத் தாள், விடைத்தாள் கட்டுகளை கொண்டு செல்ல வழித்தட அதிகாரிகள், செய்முறைத்தேர்வு மதிப்பெண் ஆன்லைனில் பதிவு என புதிய முறைகளை அரசு தேர்வுத்துறை அறிமுகப்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x