

சென்னை: 3 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மிசோரம் தவிர மற்ற 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே, பாஜக முன்னிலை வகித்த நிலையில், நாடு முழுவதும் உள்ள பாஜக அலுவலகங்களில் காலை முதலே தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி வெற்றியைக் கொண்டாடினர்.
அந்த வகையில், சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தொண்டர்கள் மேளதாளத்துடன் ஆட்டம் போட்டு, பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில், பாஜக மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி, கரு.நாகராஜன், மாநில செயலாளர் பிரமிளா சம்பத், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, மாவட்ட தலைவர்கள் விஜய் ஆனந்த், காளிதாஸ், ஊடகப் பிரிவு மாநில தலைவர் ரங்க நாயகலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் வி.பி.துரைசாமி கூறியதாவது: 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு எதிராகதான் வரும் என கருத்துக் கணிப்புகளில் கூறி வந்தனர். ஆனால், மக்களின் மீது வைத்திருந்த நம்பிக்கையால், அந்த கருத்துக் கணிப்பை எல்லாம், தவிடு பொடி யாக்கி வெற்றி பெற்றிருக்கிறோம்.
தெலங்கானாவில் ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருந்த பாஜக, இன்று 10 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுகிறது. அதிலும் குறிப்பாக 10 சதவீத வாக்குகள் அதிகமாக பெற்றிருக்கிறோம். இது, 10 ஆண்டு கால மோடி ஆட்சிக்கு கிடைத்த வெற்றி. சத்தீஸ்கரில் பழங்குடியினரும், பட்டியலின மக்களும், தங்களது முழு நன்றியை பிரதமர் மோடிக்கு இந்த தேர்தல் மூலம் தெரிவித்துள்ளனர்.
மிசோரம் மாநில முடிவுகளும் பாஜகவுக்கு சாதகமாகதான் இருக்க போகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பெற்ற வெற்றி மூலம், இந்தியாவில் உள்ள 125 தனி தொகுதியில் இருக்கும் பட்டியலின மக்கள், பழங்குடியினர், எதிர்காலத்தில் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம். பாஜகவின் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இதேபோல், சென்னையில் பல்வேறு இடங்களில் பாஜக நிர்வாகிகள் தேர்தல் வெற்றியை கொண்டாடினர்.
காங். கட்சியினரும் கொண்டாட்டம்: நேற்று நடைபெற்ற 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தெலங்கானா மாநிலத்தில் முதல் முறையாககாங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அதை தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி அணி சார்பில், அதன் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் தலைமையில், சென்னை சத்ய மூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.