Published : 04 Dec 2023 04:02 AM
Last Updated : 04 Dec 2023 04:02 AM

செம்பரம்பாக்கம் ஏரி நீர் வெளியேற்றம் 3000 கன அடியாக உயர்வு: புழல் ஏரியில் தொடர்ந்து 2 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

திருவள்ளூர்: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, மீண்டும் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியிலிருந்து, தொடர்ந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழையால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளிலிருந்து முன்னெச்சரிக்கையாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தின் அளவுக்கு ஏற்ப அவை அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது.

மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு, 24 அடி உயரம் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று மதியம் நிலவரப்படி இருப்பு 2,792 மில்லியன் கன அடியாகவும், உயரம் 20.74 அடியாகவும், வரத்து விநாடிக்கு 2,800 கன அடியாகவும் இருந்தது. இச்சூழலில், நேற்று மதியம் 1.30 மணிமுதல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை நீர்வள ஆதாரத்துறையினர் மீண்டும் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்தனர்.

அதேபோல், திருவள்ளூர் மாவட்டம், புழல் ஏரியிலிருந்து கடந்த நவம்பர் 30-ம் தேதி காலை 9.30 மணி முதல் விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மொத்தம் 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு, 21.20 அடி உயரம் கொண்ட அந்த ஏரியில் நேற்று காலை நிலவரப்படி இருப்பு, 2,767 மில்லியன் கன அடியாகவும், உயரம் 18.78 அடியாகவும், வரத்து விநாடிக்கு 1,276 கன அடியாகவும் உள்ளது. இதிலிருந்து தொடர்ந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் ஏரிக்கு விநாடிக்கு 890 கன அடி, பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 830 கன அடி, கண்ணன் கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரிக்கு விநாடிக்கு 150 கன அடி நீர்வரத்து உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள 1,146 ஏரிகளில், நேற்றைய நிலவரப்படி, 207 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 165 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலாகவும், 347 ஏரிகளில் 50 சதவீதத்துக்கு அதிகமாகவும் நிரம்பியுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x