மாங்காடு அருகே மின்சாரம் பாய்ந்து அண்ணன், தம்பி உயிரிழப்பு

மாங்காடு அருகே மின்சாரம் பாய்ந்து அண்ணன், தம்பி உயிரிழப்பு
Updated on
1 min read

பூந்தமல்லி: காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு, வடக்கு ரகுநாதபுரம், கிருஷ்ணாநகர் பகுதியைச் சேர்ந்த துணி வியாபாரி பன்னீர்செல்வம் (48). இவரது மனைவி ஈஸ்வரி(40). இத்தம்பதிக்கு மதன் பிரசாத்(22), யுவன் சங்கர் ராஜா(20) என இரு மகன்கள்.

இந்நிலையில் நேற்று மாலை யுவன் சங்கர் ராஜாவின் நண்பரான அதே பகுதியில் வசிக்கும் மனோஜ் (20), என்பவர் வீட்டுக்கு வந்தார். அப்போது. அவர் வீட்டின் முதல் தளத்தில் இருந்த கண்ணாடி ஜன்னல் கதவை நகர்த்திய போது எதிர்பாராத விதமாக அந்த வழியாகச் சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் மனோஜின் கை பட்டது, மின்சாரம் பாய்ந்ததால் அவர் அலறினார்.

உடனே மதன் பிரசாத், யுவன் சங்கர் ராஜா இருவரும் மனோஜை காப்பாற்ற முயன்றபோது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. 3 பேரின் அலறல் சத்தம் கேட்டு தாய் ஈஸ்வரி ஓடிச் சென்று காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால், 4 பேரும் பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

மின்சாரம் பாய்ந்து மயங்கிய நிலையிலிருந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் மதன் பிரசாத், யுவன் சங்கர் ராஜா ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. ஈஸ்வரி, மனோஜ் ஆகியோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாங்காடு போலீஸார் தகவல் அறிந்து வந்து, உயிரிழந்த அண்ணன், தம்பி உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம், புல்லலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் அருண், நேற்று முன்தினம் மாலை எறையூர் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தின் முன்பு லோடு ஏற்ற தன் வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது, அவர் லாரியின் பின்பக்க இரும்பு கதவைத் திறக்கும் போது பக்கத்திலிருந்த டிரான்ஸ்ஃபார்மர் ஒயரில் பட்டு மின்சாரம் பாய்ந்து துடித்துக் கொண்டிருந்துள்ளார்.

அதைப் பார்த்த பக்கத்து நிறுவனத்தின் ஓட்டுநராக இருக்கும் கொளத்தூர் பகுதியில் வசிக்கும் ராமு, அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக ஒரகடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in