Published : 04 Dec 2023 04:04 AM
Last Updated : 04 Dec 2023 04:04 AM
சென்னை: பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் தமிழக வடகடலோர பகுதிகளை நெருங்கிச் செல்லும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், நேற்று காலை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களை தொடர்பு கொண்டு முதல்வர் கள நிலவரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து, நேற்று மாலை 5.45 மணிக்கு, சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார். அங்கு, அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து, மழை நிலவரம் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் விளக்கினார். அதன்பின் சென்னையை சுற்றியுள்ள நீர்த் தேக்கங்களில் நீர் இருப்பு தொடர்பாக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா விளக்கம் அளித்தார். தொடர்ந்து, அவசரகால செயல்பாட்டு மையத்தில் இருந்த படியே, புயல், மழை நிலவரம் குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய துணைத் தலைவர் கே.பாலச் சந்திரனிடம் கேட்டறிந்தார். அதன் பின் மாவட்ட ஆட்சியர் ஒருவரிடம், தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: டிச.1-ம் தேதி மற்றும் அதற்குப்பின் என இருமுறை சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மழை முன்னெச்சரிக்கை குறித்து அறிவுரை வழங்கியுள்ளேன். அந்த அடிப்படையி்ல 121 பல் நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து முன்கூட்டியே மக்களை நிவாரண மையங்களில் அழைத்து வந்து தங்கவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் மீட்பு நிவாரணப் பணிக்கு 350 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புப் படையின் 14 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 பேர் அடங்கிய 9 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 2.44 கோடி பொதுமக்களுக்கு பொதுவான எச்சரிக்கை குறுஞ் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.
கடலோர மாவட்டங்களில் உள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்கள், பொது மக்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்படுகிறது. இதனால் அனைத்து படகுகளுக்கும் பாதுகாப்பான சூழல் ஏற்படு்த்தப்பட்டுள்ளது. புயல், கனமழை குறித்து ஊடகங்கள் மூலம் செய்திகள் வெளியிட்டு பணியாற்றி வருகிறோம். புயல் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் செய்யவேண்டிய, செய்யக்கூடாதவற்றை குறித்தும் விளக்கமாக தெரிவித்துள்ளோம்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்படும் இடங்களில் இருந்து இதுவரை, 685 பேர் 11 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். அவசரகால செயல்பாட்டு மையம், சென்னை மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் மின்துறை உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணிநேரமும் இயங்குகின்றன.
பொதுமக்கள் புயலின் காரணமாக பலத்த காற்றுடன் அதிகனமழை பெய்யும் என்பதால் மின் கம்பங்கள், மின் கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழும் என்பதாலும் தேவையின்றி வெளியில் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால், மாவட்ட நிர்வாகங்கள், மாநகராட்சி அறிவுறுத்தல்படி நிவாரண முகாம்களில் தங்க வேண்டும். அம்மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளை செய்ய உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு ஆகியோரும், செங்கல்பட்டில் அமைச்சர் தா.மோ.அன்பசரசனும், திருவள்ளூரில் பி.மூர்த்தியும், காஞ்சிபுரத்தில் சு.முத்துசாமியும், ராணிப்பேட்டையில் ஆர். காந்தியும் நிவாரணப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர் மக்கள் பிரதநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளும் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன் பெய்த மழையில் இரவு, பகல் பாராமல் பணியாற்றியவர்களுக்கு நன்றி. அடுத்தடு்த்த நாட்களுக்கு பாதிப்பு ஏற்படும் பகுதிகளை சீரமைக்க அர்ப் பணிப்பு உணர்வுடன செயல்பட வேண்டும். எதிர்க்கட்சித்தலைவரின் அரசியல் நையாண்டி கேள்விகளுக்கு நான் விளக்கம் தர விரும்பவில்லை.
மக்களை முதலில் பாதுகாக்க வேண்டும். அரசியல் பேச விரும்பவில்லை. மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. நீர்த் தேங்கும் பகுதிகளில் 1000 மோட்டார்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது மத்திய அரசிடம் உதவி கேட்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ‘நிச்சயம் கேட்கப்படும்’ என்று முதல்வர் பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT