

புதுச்சேரி: புதுவையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி அவ்வப்போது விட்டுவிட்டு காற்றுடன் மழை பெய்தது. புதுவை துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
காற்றோடு மழை பெய்யும் வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்பதை இந்த கூண்டு எடுத்துக் காட்டுகிறது. இதற்கிடையில் புதுவை சோலைநகர் வன்னியர் வீதியில் நேற்று முன்தினம் இரவு டிரான்ஸ் பார்மர் ஒன்றில் தீ பொறி ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இதேபோல் ஈ.சி.ஆர் சாலையில் மரம் ஒன்று வேரோடு சாலையில் விழுந்தது. அதனையும் அவர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர். நேற்று காலை குருசு குப்பம் பகுதியில் விழுந்த மரத்தையும் அப்புறப்படுத்தினர். இதேபோல் புதுவை முழுவதும் ஆங்காங்கே காற்றினால் விழுந்து வரும் மரக்கிளைகளை உடனுக்குடன் வெட்டி அகற்றி வருகின்றனர்.
வார இறுதி நாட்களில் வழக்க மாக வரும் சுற்றுலா பயணிகள், புயல் எச்சரிக்கை காரணமாக அதிகளவில் வரவில்லை. அதே நேரத்தில் ஏராளமானோர் கடற் கரைச் சாலையில் குவிந்திருந்தனர். அவர்களை போலீஸார் கடற்கரை அருகே செல்லாதீர் என எச்சரித்தனர். அதுபோல், வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை களில் செயல்படும் சண்டே மார்க் கெட் போடப்பட்டிருந்தது. மழையால் மக்கள் கூட்டமும் குறைவாக இருந்தது.