மிக்ஜாம் புயல் | தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுரை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பொழிவும், பலத்த காற்றும் வீசப்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த மாவட்டங்களில் இயங்கும் தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கி உள்ளது.

ஏற்கெனவே மழை மற்றும் புயலை கருத்தில் கொண்டு இந்த நான்கு மாவட்டங்களிலும் இயங்கும் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை ஒருநாள் பொது விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தனியார் நிறுவனங்களுக்கு அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

மிக்ஜாம் புயல் இன்று (டிச.3, ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 240 கி.மீ கிழக்கு - தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 210 கி.மீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 330 கி.மீ தெற்கு - தென்கிழக்காகவும் ஆகவும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து திங்கட்கிழமை (டிச.4) முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் பொழுது சாலைகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படவும், காற்று வேகத்தின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழவும், மின்கடத்திக் கம்பிகள் அறுந்து விடவும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்தியாக வெளியிட்டுள்ளது. அரசும் அத்தியாவசியப் பணிகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், மின்சாரம், பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள் போன்ற அமைப்புகளின் பணியாளர்களைத் தவிர இம் மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை ஒரு நாள் பொது விடுமுறை என அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய (Work From Home) அறிவுறுத்துமாறும் தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்படவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in