

சென்னை: புயலின் காரணமாக பலத்த காற்றுடன் அதி கன மழை பெய்யும். இதனால், மின் கம்பங்கள், மின் கம்பிகள், மரங்கள் விழுவதற்கு வாய்ப்புள்ளதால், பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையில்லாமல் வெளியில் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஆபத்தான இடங்களிலும், நீர்நிலைகளுக்கு அருகிலும் செல்ஃபி எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மிக்ஜாம் புயல் சென்னைக்கு மிக அருகில் கடந்து செல்வதால், மிக கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இன்று (டிச.3) முதல் பொதுமக்கள் பின்வரும் எச்சரிக்கையை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவசர உதவிக்கு பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். மாநில அவசரகால செயல்பாட்டு மையம் – 1070, வாட்ஸ் அப் எண். – 94458 69848, மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் – 1077, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை (டிச.5 - திங்கள்கிழமை) பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
டிச.4 - எங்கெல்லாம் அதி கனமழை? - திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முழுமையாக வாசிக்க > டிச.5 காலையில் கரையைக் கடக்கும் ‘மிக்ஜாம்’ புயல் - தமிழகத்தில் எங்கெல்லாம் அதி கனமழை வாய்ப்பு?
இதனிடையே, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 350 வீரர்கள் கொண்ட 14 குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள விரைந்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.