

சென்னை: பொதுநலனை கருத்தில்கொண்டு 500 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடியது தொடர்பான தமிழகஅரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், கடைகளை திறக்க உத்தரவிடக் கோரிகட்டிட உரிமையாளர்கள் தொடர்ந்தவழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 500 மதுபானக் கடைகளை மூடும்படி டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஜூன் 20-ம்தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து அந்த டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு கட்டிடங்களை வாடகைக்கு கொடுத்திருந்த உரிமையாளர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் மீதான விசாரணை, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக நடந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் கூறியதாவது: டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்காக குறிப்பிட்ட முதலீடுகளை செய்து கட்டிடம் கட்டி அவற்றை வாடகைக்கு விட்டிருந்தோம்.
விதிகளுக்கு புறம்பானது: ஒப்பந்தம் காலாவதியாவதற்குள் திடீரென 500 கடைகள் மூடப்பட்டதால் எங்களுக்கான வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. கல்விநிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளை மட்டுமே மூடுவது எனவிதிகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு புறம்பாக எங்களதுகட்டிடங்களில் இயங்கி வந்தமதுபானக் கடைகளை மூடியிருப்பது விதிகளுக்கு புறம்பானது.
எத்தனையோ மதுபானக் கடைகள் வழிபாட்டு தலங்களுக்கு அருகிலும், கல்வி நிறுவனங்களின் அருகிலும் செயல்பட்டு வருகின்றன. எனவே, அவற்றை மூடிவிட்டு எங்களது கட்டிடங்களில் இயங்கி வந்த மதுபானக் கடைகளை திறக்கடாஸ்மாக்குக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டது.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல்தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘மதுபானக் கடைகளை மூடுவது குறித்தும், தொடர்ந்து நடத்துவது குறித்தும் அரசுதான் முடிவெடுக்க முடியும். டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வந்த கட்டிடங்களின் உரிமையாளர்கள் தங்களது குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்தான் தெரிவிக்க வேண்டுமேயன்றி, நீதிமன்றத்தை நாட முடியாது’’ என்றார்.
அதையடுத்து நீதிபதி, ‘‘மனுதாரர்களுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்துக்குமான தொடர்பு என்பது நில உரிமையாளர் - வாடகைதாரர் உறவுதான். தனது தொழிலை நடத்துவதா அல்லது மூடுவது என்பதை வாடகைதாரர்தான் தீர்மானிக்க முடியும்.
அதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளது. அதைத் தாண்டி கட்டிட உரிமையாளர்கள் கடையை திறக்க வேண்டும் என கோர முடியாது. மேலும், பொதுநலனை கருத்தில்கொண்டு மதுபானக் கடைகளை மூடியது தொடர்பான அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது. அரசின் இந்த முடிவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளிடம் முறையிடலாமேயன்றி வழக்கு தொடர முடியாது’’ என கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.