மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் விடிய, விடிய சோதனை: அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டம்
மதுரை: மதுரை அமலாக்கத் துறை அலு வலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விடிய, விடிய மேற்கொண்ட 13 மணி நேர சோதனை நேற்று காலை 7 மணியளவில் முடிவடைந்தது. இதற்கிடையில், அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
மதுரையில் உள்ள அமலாக்கத் துறையின் துணை மண்டல அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய அன்கித் திவாரி, திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, அவர் பணியாற்றிய மதுரை அமலாக்கத் துறை துணை மண்டல அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
டிஎஸ்பி சத்யசீலன் தலைமை யில் விடிய விடிய நடந்த 13 மணி நேர சோதனை நேற்று காலை 7 மணிக்கு முடிவடைந்தது. இதை யொட்டி, 100-க்கும் மேற்பட்ட தமிழக போலீஸாரும், 50-க்கும் மேற்பட்ட இந்தோ-திபெத்தியன் பாதுகாப்புப் படையினரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆவணங்கள் பறிமுதல்: இந்த சோதனையில், அன்கித் திவாரி அறையிலிருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள், பதிவேடு கள், அவரது வங்கிக் கணக்கு மற்றும் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அன்கித் திவாரி அளித்த வாக்குமூலத்தின்படி, இதில் தொடர்புடைய அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மேலும், அன்கித் திவாரியை 15 நாள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தெரிவித்தனர்.
