

சென்னை: சென்னையில் புயல் மீட்பு பணிகளில் 18 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை மற்றும் புயல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதையொட்டி, மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ள சென்னை பெருநகர காவல் பேரிடர் மீட்பு குழுவை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று சந்தித்து அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது, மீட்பு பணிகளுக்கான உபகரணங்களை அவர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை காவல்துறை சார்பில் மீட்பு பணிக்குழு தயார் நிலையில் உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழு, மாநில பேரிடர் மீட்பு குழுபோல, தற்போது, சென்னை காவல்துறை சார்பில் மாவட்ட பேரிடர் குழு உள்ளது. இந்த குழுவில் 10 பேர் உள்ளனர். சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் இந்த குழு தயார் நிலையில் இருக்கும். ஒவ்வொரு மீட்பு குழுவுக்கும் மீட்பு பணிகளுக்காக தலா ஒரு வாகனம் என 12 வாகனங்கள், ரப்பர் படகு, மிதவை ஜாக்கெட்டுகள், தனித்துவமான ஜாக்கெட்டுகள், கயிறு உட்பட 21 மீட்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த குழுவில் ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்களும் உள்ளனர். அதேசமயம் சிலர் புதிதாக பயிற்சி பெற்று வந்துள்ளனர். சென்னையில் 18 ஆயிரம் போலீஸார் புயல் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், 2,500 போக்குவரத்து போலீஸார், 2 ஆயிரம் ஊர்காவல் படையினர், 200 ஆயுதப்படை போலீஸார், 100 போக்குவரத்து வார்டன் ஆகியோர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், காவல் மருத்துவமனையில் இருந்து, சிறப்பு மருத்துவ உடனடி சிகிச்சை மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
காவல் ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர செயலாக்க மையம் தொடங்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் மற்றும் அவசர உதவி மையங்கள் செல்லும் வகையில் சாலைகளில் கிரீன் காரிடர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. காவல் துறை கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும். காவல் துறை அவசர உதவிக்கு பொதுமக்கள் 100 அல்லது 112 மற்றும் சென்னை மாநகராட்சி உதவிக்கு 1913, தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவுக்கு 101 எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
அனைத்து காவல் ரோந்து வாகனங்களிலும் மருத்துவ உதவிக்காக முதலுதவி பெட்டிகள் வைத்து கொள்ளவும், டார்ச் லைட், கயிறு, ஒளிரும் விளக்குகள், குடிநீர் பாட்டில்கள் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.