

சென்னை: தங்களது பகுதிகளில் இருந்தவாறே மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் டிச.2 முதல் 4-ம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி அரசு நிர்வாகம் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அத்தியாவசிய தேவைகள்: அரசு அதிகாரிகளின் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி அமைப்புகளில் உள்ளஅனைத்து நிர்வாகிகளும் தத்தமதுபகுதிகளில் இருந்து மக்களுக்குதேவையான நிவாரணப் பணிகளை செய்ய வேண்டும் என உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல மக்களுக்கான உணவு, உடை, மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக ளுக்கு உதவிடும் வகையில் அரசு அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தேவையான உதவிகளையும் செய்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். பொதுமக்கள் உதவிக்கு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எண் (1070), சென்னை மாவட்ட உதவி எண் (1077),
வாட்ஸ் - அப் எண்: 9445869848 மற்றும் சென்னை மாநகராட்சி உதவி எண் 1913 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் கே.என்.நேரு உறுதி: இதற்கிடையே, வங்கக் கடலில்உருவாகியுள்ள புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள சென்னைமாநகராட்சியில் மேற்கொள்ளப் பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: கனமழை காரணமாக கடந்த 2 நாட்களில் பெற்ற அனுபவம் அடிப்படையில் அதிக நீர் தேங்கும்பகுதிகளில் நீரை வெளியேற்றஅதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள னர். ரூ.2,043 கோடியில் 267 கிமீ நீளத்துக்கு மழைநீர் வடிகால்களை கட்டி இருக்கிறோம். அவ்வாறு வடிகால்கள் அமைக்கப்பட்ட பிரகாசம்சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, வால்டாக்ஸ் சாலை, பெரம்பூர் பேப்பர் மில் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மழைக்கு நீர் தேங்கவில்லை. எவ்வளவு மழை பெய்தாலும் மக்களை பாதிக்காத வகையில் மழைநீரை வெளியேற்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன.
20 செ.மீ மழை வாய்ப்பு: அடுத்த இரு நாட்களுக்கு தொடர் மழையும், சுமார் 20 செமீவரை மழை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. அதனால் பொதுமக்கள் இரு நாட்களுக்கு பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படு கிறது. இரு நாட்களுக்கு பூங்காக்கள் மூடப்படும். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவமுகாம்கள் நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மாநகரப் பகுதிகளில் உள்ள இயந்திர நுழைவு வாயில்களில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க சென்னை குடிநீர் வாரியம் சார்பில்தூர் வாரப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்தும் கூடுதல் இயந்திரங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு, மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய், மாநகராட்சி கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா, இணை ஆணையர் ஜி.எஸ்.சமீரன், துணை ஆணையர் ஷரண்யா அறி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.