Published : 20 Jan 2018 10:29 AM
Last Updated : 20 Jan 2018 10:29 AM

காணும் பொங்கல் கால வருவாய் குறைந்தது: பராமரிப்புச் செலவு அதிகரிப்பதால் அதிகாரிகள் கவலை

மாநகர போக்குவரத்துக் கழகத் தில் கடந்த சில ஆண்டுகளாக காணும் பொங்கலில் கிடைக்கும் மொத்த வருவாய் அளவு படிப் படியாக குறைந்து வருகிறது. பழைய பஸ்கள் அதிகரித்து வருவதால் பராமரிப்புச் செலவும் அதிகரிப்பதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் 892 வழித்தடங்களில் 3,688 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் சராசரியாக 48 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். மக்களின் தேவை ஒரு புறம் அதிகரித்து வந்தாலும், பஸ்களின் இயக்கத்தை முறைப்படுத்தாதது, இயக்க செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வழக்கமாக இயக்கப்படும் மாநகர பஸ்களே முழு அளவில் இயக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டில் காணும் பொங்கலன்று ரூ.3 கோடியே 8 ஆயிரமாக இருந்த மொத்த வசூல் 2017-ம் ஆண்டு காணும் பொங்கலில் ரூ.2 கோடியே 75 லட்சமாகவும், 2018-ம் ஆண்டில் ரூ.2 கோடியே 58 லட்சமாகவும் குறைந்துள்ளது.

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து அதிகாரிகள், ‘‘கடந்த சில ஆண்டுகளாக காணும் பொங்கலில் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு கிடைத்து வரும் மொத்த வசூல் குறைந்து வருவது உண்மைதான். அதற்கு போதிய அளவில் பஸ்கள் இயக்காததை காரணமாகக் கூற முடியாது. வண்டலூர், மெரினா, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு காணும் பொங்கலின்போது மாநகர பஸ்களில் செல்லும் மக்கள் கூட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது. மாறாக சொந்த மற்றும் தனியார் வாகனங்களை சிலர் பயன்படுத்துகின்றனர். பழைய பஸ்களால் ஒட்டுமொத்த செலவும் எங்களுக்கு சற்று கூடியுள்ளது. எனவே, புதிய பஸ்களை வாங்குவதற்கும் தலைமை நிர்வாகம் தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x