

மதுரை ED அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை - நடந்தது என்ன?: மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் அலுவலராகப் பணி புரிந்துவந்தவர் அங்கித் திவாரி. இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சுரேஷ்பாபு என்ற மருத்துவரிடம் 20 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, திண்டுக்கல்லில் வைத்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, மதுரையில் உள்ள அங்கித் திவாரியின் வீட்டில் சோதனை நடைபெற்றது. அதன்பிறகு, மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள அமலாக்கத் துறை துணை மண்டல அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு விசாரணை தொடங்கி விடிய விடிய சோதனை நடத்தப்பட்டு, சனிக்கிழமை அதிகாலை 7 மணிக்கு முடிவடைந்தது.
இதனிடையே, லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனைக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் மறுத்தபோது அவர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தி அலுவலகத்தில் சென்று சோதனை நடத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடரந்து அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையின்போது அங்கிட் திவாரிக்கு தொடர்புடைய பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும், இந்த கைது விவகாரத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை 13 மணி நேரம் சோதனை நடத்திய நிலையில், சில அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத் துறையினர் திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளன.
இதனிடையே, இந்த குற்ற நிகழ்வில் பிற அமலாக்கத்துறை அலுவலர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக அங்கித் திவாரிக்கு தொடர்புடைய இதர இடங்களிலும் சோதனைகள் மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
“இடைத்தரகர்கள் மூலம் என்னையும் மிரட்டினர்” - சபாநாயகர் அப்பாவு: “வருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் இடைத்தரகர்கள் மூலம் என்னைக் கூட மிரட்டின. ஊரை விட்டுப் போகச் சொன்னார்கள். செல்போன் நம்பரை மாற்றச் சொன்னார்கள்” என்று தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.
“தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகள்” - அண்ணாமலை: அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். ஒரு தனிநபரின் தவறுக்காக ஒட்டுமொத்த அமலாக்கத் துறையையும் குறைகூறக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், “தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகள்தான் இருக்கிறார்கள். அதனால் ஒரு தனி மனிதத் தவற்றை கட்சியோடும் தலைவர்களுடன் ஒப்பிடுகின்றனர். தமிழகம் இப்படியான அரசியல்வாதிகளைக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது தமிழகத்தின் சாபக்கேடு அந்த சாபக்கேட்டை 2026-ல் பாஜக விலக்கும்” என்று அவர் கூறினார்.
புயல் அப்டேட்: டிச.4-ல் எந்த மாவட்டங்களில் மிக கனமழை?: டிசம்பர் 3-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெறும் புயல், நான்காம் தேதி தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என்றும், பிறகு கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து ஐந்தாம் தேதி ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலானது கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, டிசம்பர் 4-ம் தேதியன்று வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு மழை விடுமுறை: புயல் மற்றும் அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் டிசம்பர் 4-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு மழை விடுமுறை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அதி கனமழை காரணமாக, பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் எனவும், மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் இந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
“புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது” - அமைச்சர்: மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, “எந்தெந்தப் பகுதிகளில் மழை பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்பகுதிக்கு மீட்புக் படைகளை அனுப்பி வைத்திருக்கிறோம். புயலால் சேதம் அடையும் மரங்கள், மின்கம்பங்களை விரைந்து அகற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தேவையான இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
திமுக அரசு மீது இபிஎஸ் சரமாரி சாடல்: “சென்னையில் மிக கனமழை பெய்துள்ளது. மழையின் காரணமாக சென்னை மாநகரமே தண்ணீரில் மிதந்து கொண்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து நான்காயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தண்ணீர் எங்கும் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்கள். ஆனால், ஒருநாள் மழைக்கே சென்னை மாநகரம் தண்ணீரில் தத்தளிக்கும் காட்சியை பார்க்க முடிகிறது.
திமுக அரசு முழுமையான வடிகால் வசதிகளை ஏற்படுத்தியிருந்தால் தண்ணீர் தேங்காமல் இருந்திருக்கும். நிர்வாகத் திறமை இல்லாத அரசாக திமுக அரசு இருக்கிறது. ஊழல் செய்வதை மட்டுமே இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் செய்து வருகிறது. அதை மட்டுமே இவர்களின் சாதனையாக பார்க்க முடிகிறது.
மேலும், சென்னை நகரின் மையப்பகுதியான தீவுத் திடலை சுற்றி கார் பந்தயம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 242 கோடி ரூபாய் செலவு செய்வதாக செய்தி வாயிலாக பார்த்தேன், இதற்கு ரூ.42 கோடி அரசு சார்பில் சாலையை சரிசெய்வதற்காக அரசு செலவு செய்வது கண்டிக்கத்தக்கது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக் விமர்சித்துள்ளார்.
சூரியக் காற்று அளவீடுப் பணியை தொடங்கியது ‘ஸ்விஸ்’ கருவி: ஆதித்யா-எல்1 விண்கலம் சூரியக் காற்றில் உள்ள துகள்களின் அயனிகளை அளவிடும் பணிகளைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆந்திரா - தெலங்கானா மோதல் - மத்திய அரசு தலையீடு: நாகார்ஜுன சாகர் அணையில் இருந்து ஆந்திரப் பிரதேச போலீசார் தன்னிச்சையாக தண்ணீர் திறந்ததால், ஆந்திரப் பிரதேசத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மத்திய அரசின் தலையீட்டை அடுத்து மோதல் தணிந்துள்ளது.
காசாவில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்: ஒருவார கால தற்காலிக போர் நிறுத்தம் முடிந்த நிலையில், இஸ்ரேலிய தாக்குதலில் காசா பகுதியில் 178 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இஸ்ரேல் ராணுவமோ ஹமாஸ் பதுங்கிடம் என அடையாளம் காணப்பட்ட 200 இடங்களை மட்டுமே குறிவைத்து தாங்கள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.