

விழுப்புரம்: “தமிழகத்தில் மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல்வாதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைதான். சோஷியல் மீடியாவில் கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு அவரின் செயல்பாடு உள்ளது” என்று சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், “சென்னை மாநகரம் வரலாறு காணாத மழையினால் தத்தளித்து கொண்டிருக்கிறது. ரூ.4,000 கோடிக்கு மழைநீர் வடிகால் பணி நடைபெற்று கொண்டிருக்க நிலையில், இன்னும் மூன்று கிலோ மீட்டர் மட்டுமே பணிகள் நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், சென்னை மழையினால் சாலைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
மழை நீரை பாதிப்பினை கவனிக்க வேண்டிய முதலமைச்சர் 8-ம் தேதி நடைபெற உள்ள கார் பந்தய போட்டி நடத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தக் கார் பந்தயத்துக்காக ரூ.242 கோடி செலவு செய்துள்ளது திமுக அரசு. இது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ளார். மற்ற அரசியக் கட்சியினர் மவுனம் காத்து வருகிறார்கள். கார் பந்தயம் நடைபெற உள்ள சாலைகளில் சில பகுதிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது 24 மணிநேரத்தில் மத்திய அரசிடமிருந்து அனுமதி கடிதம் பெற்று கொடுத்திருக்கிறார்கள்.
ஏற்கெனவே கூறியதுபோல திமுகவிற்கும், பாஜகவுக்கும் உறவு இருக்கிறது. அண்ணாமலை இதைப் பற்றி வாய்திறந்திருக்கிறாரா?. இதனால்தான் நாங்கள் பாஜகவுக்கும் திமுகவுக்கும் ரகசிய உறவு உள்ளதாக கூறுகிறோம். இந்த அரசு ஒரு விளம்பர அரசாக உள்ளது. குறைந்த கட்டணமாக மேஜிக் பால் விற்பனையை நிறுத்தியிருக்கிறார்கள். அதிக விலைக்கு பாலை விற்பனை செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் அம்மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காமல் மறைத்து, அந்த தொட்டியை இடித்து ஆதாரங்களை அழித்துள்ளார். நீலகிரியில் சிறுமி பாலியல் வன்கொடுமையானதை அயடுத்து, சிறுமிக்கு கைவிலங்கு போட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து சென்ற அவல நிலை இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ளது.
கார் பந்தயத்துக்காக தமிழக அரசு ரூ.242 கோடி செலவு செய்துள்ளது குறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் அரசு ஊழியர்கள் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மத்திய அரசாங்கத்தில் பணியாற்றுகின்றவர்கள் தாக்கபடுகின்ற சம்பவமும் இங்கு நடைபெறுகிறது.
அமலாக்கத் துறை அதிகாரி லஞ்சம் பெற்றதற்கு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், இரவில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதால் சந்தேகம் எழுகிறது. அமலாக்கத் துறையில் குற்றம் யார் செய்திருந்தாலும் தவறு, தவறுதான். தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், கைது செய்யப்பட்ட அந்த நேரம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
அமலாக்கத் துறை விசாரணைக்கு அதிமுகவினர் பயந்து நடுங்கவில்லை. எப்போது வேண்டுமானாலும் நான் விசாரணைக்குத் தயாராக இருக்கிறேன். அதிமுக ஆட்சியில் அனைத்தும் சரியாக நடந்தது. தமிழகத்தில் மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல்வாதி பாஜக தலைவர் அண்ணாமலைதான். சோஷியல் மீடியாவில் கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு அவர் செயல்படுகிறார்” என்றார் சி.வி.சண்முகம்.
முன்னதாக, “தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகள்தான் இருக்கிறார்கள். அதனால் ஒரு தனி மனிதத் தவற்றை கட்சியோடும் தலைவர்களுடன் ஒப்பிடுகின்றனர். தமிழகம் இப்படியான அரசியல்வாதிகளைக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது தமிழகத்தின் சாபக்கேடு அந்த சாபக்கேட்டை 2026-ல் பாஜக விலக்கும்” என்று அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.