மழைக்காலத்தையொட்டி தமிழகம் முழுவதும் 2,000 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 2 ஆயிரம் இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களும், 100 இடங்களில் மருத்துவ காப்பீடு முகாம்களும் நடைபெறுகின்றன.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றன. கடந்த அக்டோபர் 23-ம் தேதி தொடங்கி, ஒவ்வொரு சனிக்கிழமையும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 5 வாரங்களில் இதுவரை 10,576 முகாம்கள் நடத்தப்பட்டு, 5.22 லட்சம் பேர் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், மழைப் பொழிவு அதிகம் உள்ளதால், முதல்வர் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் 2,000இடங்களில் இன்று (டிசம்பர் 2) காலை 9 மணி முதல்மாலை 4 மணி வரை மழைக்கால சிறப்பு மருத்துவமுகாம் நடைபெறும். பொதுமக்கள் இதில் பங்கேற்று,பரிசோதனை மேற்கொண்டு மழைக்கால நோய்களிடம்இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

100 இடங்களில் காப்பீடு முகாம்: தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் கடந்த 2009-ம் ஆண்டு முதல் இதுவரை 1.45 கோடி குடும்பங்கள் காப்பீட்டு திட்ட அட்டை பெற்றுள்ளனர். புதிதாக திருமணம் ஆனவர்கள், விடுபட்ட குடும்பத்தினர் ஆகியோரும் இத்திட்டத்தில் சேர ஏதுவாக, சென்னையில், அடையாறு, மயிலாப்பூர், நீலாங்கரை உட்பட தமிழகம் முழுவதும் 100 இடங்களில் இன்று (டிசம்பர் 2) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை காப்பீடு முகாம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in