Published : 02 Dec 2023 05:53 AM
Last Updated : 02 Dec 2023 05:53 AM
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் கே.சீனிவாசன் பதவிக்காலம் நவம்பர் 30-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அவருக்கு பதவி உயர்வுடன் கூடிய மூன்றாண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பதவிக்காலம் முடிவடைந்த ஒருவருக்கு பணி நீட்டிப்பு வழங்குவது, அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களின் பதவி உயர்வை பாதிக்கும் என்பதை அறிந்தும் பேரவைச் செயலகம் இதை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
முந்தைய ஆட்சியில் எதையெல்லாம் தவறு என்று ஸ்டாலின் கூறியிருந்தாரோ, அதே தவறுகள்தான் இப்போது மீண்டும் அரங்கேற்றப்பட்டுள்ளன சட்டப்பேரவைச் செயலாளராக பணியாற்றுபவர்கள் ஆளுங்கட்சியினருக்கு இணக்கமாக நடந்து கொண்டால், அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவது காலம்காலமாக இருக்கிறது. இதே தவறை திமுக அரசும் செய்கிறது
எனவே, சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசனுக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை உடனடியாக ரத்து செய்து, தகுதியும் திறமையும் கொண்ட ஒருவரை சட்டப்பேரவையின் புதிய செயலாளராக நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தலைமை செயலக சங்கம்: தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன், இணை செயலாளர் (பொது) லெனின் வெளியிட்ட அறிக்கை:
தனி நபருக்காக பேரவையின் முதுகெலும்பு மீண்டும் வளைவது அழகல்ல. 2018-ல் அதிமுக ஆட்சியில் பேரவை செயலாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்ட போது எதிர்க்கட்சித் தலைவராக ஊழியர்களின் குமுறலை வெளிப்படுத்தியிருந்தீர்கள். தற்போதைய தங்களின் நடவடிக்கையானது அந்த குமுறல்களை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
சீனிவாசனுக்கு பதவி உயர்வு வழங்கியதற்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பணிநீட்டிப்பு ஆணையை ரத்து செய்து பேரவையின் மாண்பை முதல்வர் காத்திட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT