Published : 02 Dec 2023 05:31 AM
Last Updated : 02 Dec 2023 05:31 AM

ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு டிலைட் பால் விற்பனை தொடக்கம்: நெய் விலை லிட்டருக்கு ரூ.50 தள்ளுபடி

சென்னை: நெய் விலை லிட்டருக்கு ரூ.50 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், மாதாந்திர அட்டைதாரர்களுக்கான டிலைட் பால் விற்பனை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை நிறுத்திவிட்டு, 3.5 சதவீதம் கொழுப்புச் சத்து கொண்ட டிலைட் ஊதா நிற பாக்கெட்டை விநியோகிக்க ஆவின் நிறுவனம் முடிவு செய்தது. கடும் எதிர்ப்பு காரணமாக பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தப் போவதில்லை என்றும் அதேநேரத்தில் டிலைட் பால் விற்பனையை ஊக்குவிக்கப் போவதாகவும் ஆவின் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மாதாந்திர அட்டைதாரர்களுக்கான டிலைட் பால் விற்பனை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆவின் அதிகாரிகள் கூறியதாவது: பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்ற வகையிலும் அனைத்து வயதினரும் பருகும் வகையிலும் கடந்த மே 9-ம் தேதி வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட 500 மிலி ஆவின் டிலைட் பால் (ஊதா நிற பால் பாக்கெட்) அறிமுகம் செய்யப்பட்டு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து தற்போது ஆவின் 500 மிலி டிலைட் பால் ரூ.21 விலையில் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கும் நேற்று முதல் அனைத்து வட்டார அலுவலகங்கள், ஆவின் பாலகங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பொது மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ரூ.10-க்கு 200 மிலி ஆவின் டிலைட் பால் நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, பொதுமக்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் ஆவின் நெய் வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (டிச.2) முதல் ஜன.20-ம் தேதி வரை லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி செய்து விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த தள்ளுபடி விலையில் ஆவின் நெய்யை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x