

சென்னை: நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
நேரு யுவகேந்திரா அமைப்பு சார்பில் ‘இந்தியா-2024’ எனும் தலைப்பிலான இளைஞர் கலைத் திருவிழா, சென்னை மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன், நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:
வரும் 2047-ம் ஆண்டு உலக அளவில் வளர்ச்சியடைந்த நாடு எனும் இலக்கை எட்டுவது நமது லட்சியமாகும். இந்த பயணத்தில் நாட்டில் உள்ள இளைஞர்களின் பங்கு முக்கியமானதாகும். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்தும் தரப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு நமது இளைஞர்கள் உலக அளவில் சிறந்த போட்டியாளர்களாக வளர்கின்றனர்.
அனைத்து துறைகளிலும் ஏற்றுமதியில் சாதனை படைத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட எனது பாரதம் தளத்தில் இளைஞர்கள் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
இதுதவிர, நாடு முழுவதும் வளர்ச்சியடைந்த பாரதம் எனும் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. யாத்திரையின்போது மத்திய அரசு திட்டங்களில் விடுபட்ட பயனாளிகளை இணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. எனவே, இந்த யாத்திரையில் இளைஞர்கள் திரளாக பங்கேற்று அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நாட்டின் வளர்ச்சியிலும் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு, புதுச்சேரி நேரு யுவகேந்திரா சங்கேதன் இயக்குநர் கே.குன்ஹம்மது, என்சிசி துணைத் தலைமை இயக்குநர் ஏ.கே.ரஸ்தோகி, என்எஸ்எஸ் திட்டத்தின் மண்டல இயக்குநர் எஸ்.சாய்ராம், ஏ.எம்.ஜெயின் கல்லூரி முதல்வர் என்.வெங்கடரமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியது:
தெலங்கானா உட்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஆளுநர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தை முழுமையாக படித்த பின்னரே கருத்து கூற முடியும். 2 நாள் மழைக்கே சென்னை வெள்ளக்காடாகிவிட்டது. மழை பெய்தால் ஒரு மணி நேரத்தில் தண்ணீர் வடிந்துவிடும் என ஆளும்கட்சியினர் மார்தட்டினர். ஆனால், புயல் வர 2 நாள் இருக்கும்போதே வெள்ளத்தை இவர்களால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து எந்த பாடமும் கற்கவில்லை. திமுகவுக்கு எதிர்கால திட்டங்கள் எதுவும் இல்லை. மழைநீர் வடிகால்வாய் திட்டங்களுக்காக ரூ.4 ஆயிரம் கோடியை செலவு செய்ததாக கூறினர். ஆனால், சிலநாள் மழைக்கே சென்னை தத்தளிக்கிறது. சிங்காரச் சென்னை என்பது திமுக அமைச்சர்களின் வெறும் வாய் வார்த்தையாகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.