

மேட்டூர்/தருமபுரி: சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,030 கனஅடியாக சரிந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக பெய்துவரும் மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 3,771 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 3,030 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து குடிநீர்தேவைக்காக விநாடிக்கு 250கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தண்ணீர் திறப்பைவிட, நீர் வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 66.851 அடியாகவும், நீர் இருப்பு 29.77 டிஎம்சியாகவும் இருந்தது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில்..: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் காலை நீர்வரத்து விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக இருந்தது. ஆனால், நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. நேற்று மாலை அளவீட்டின்போதும் நீர்வரத்தில் மாற்றமில்லை.