Published : 02 Dec 2023 06:11 AM
Last Updated : 02 Dec 2023 06:11 AM
திருப்பூர்: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பூரண நலம்பெற வேண்டி திருப்பூர் மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் கோட்டை மாரியம்மன் கோயிலில் தீபம் ஏற்றியும், அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தும் வழிபாடு நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் குழந்தைவேல் தலைமை வகித்தார். கட்சியின் துணைச் செயலாளர் ஏ.எஸ்.அக்பர், மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து அரண்மனைபுதூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்ற தேமுதிகவினர், பள்ளி மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள், பேனா பென்சில், வகுப்பறைகளுக்கு தேவையான மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை பள்ளி தலைமை ஆசிரியை விஜயாவிடம் வழங்கினர்.
இதேபோல், தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்பவேண்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கயத்தாறு அகிலாண்டேஸ்வரி சமேதகோதண்டராமேஸ்வரர் ஆலயத்தில் மாவட்டச் செயலாளர் சுரேஷ் தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் கொம்பையா பாண்டியன், கயத்தாறு ஒன்றிய செயலாளர் அருண், கயத்தாறு நகர செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, விஜயகாந்த் கடந்த 18-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். மருத்துவமனை நிர்வாகம், ‘விஜயகாந்த உடல்நிலை சீராக இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. இதையொட்டி இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது’ என தெரிவித்திருந்தது. இதையடுத்து, விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விருப்பம் தெரிவித்து வாழ்த்து செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT