Published : 02 Dec 2023 06:21 AM
Last Updated : 02 Dec 2023 06:21 AM
பூந்தமல்லி: மாங்காடு அருகே செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீரில் காருடன் அடித்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் துரிதமாகச் செயல்பட்டு உயிருடன் மீட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது ரபிக் (43). இவர், நேற்று முன்தினம் மாலை தன் மனைவி ரிஸ்வான் (40), மகள் ஜூபிசான் (10) ஆகியோருடன் காரில் போரூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். பிறகு அங்கிருந்து மாங்காடு அருகே தரைப்பாக்கம் வழியாக இரவு 10 மணியளவில் வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அதேநேரம், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி அளவுக்கு திறக்கப்பட்ட உபரிநீர், தரைப்பாக்கம் சாலை வழியாக அடையாறு ஆற்றில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் பாதுகாப்புக் கருதி மாங்காடு போலீஸார் அந்த வழியாக வாகனங்கள் செல்வதைத் தடுத்து நிறுத்தி, சாலையில் கற்களை அடுக்கி வைத்து, அப்பகுதியில் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த முகம்மது ரபிக்கின் காரை போலீஸார் தடுத்து நிறுத்தி, தண்ணீர் அதிகமாகச் செல்வதால் மாற்றுப் பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தினர். அதைப் பொருட்படுத்தாத முகம்மது ரபிக், சாலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கற்களை அகற்றிவிட்டு, தரைப்பாக்கம் சாலையில் தொடர்ந்து பயணித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, சில அடி தூரம் சென்றதும் வெள்ளத்தில் சிக்கிய கார், சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு அடையாறு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, முட்புதரில் சிக்கிக் கொண்டது.
இதனால், முகம்மது ரபிக் குடும்பத்தினர்மரண பயத்தில் அலறினர். தகவலறிந்த மாங்காடு காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம் தலைமையிலான போலீஸார், தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் வரும் வரை காத்திருக்காமல், கயிறு கட்டி முகம்மது ரபிக் உள்ளிட்டோரை சுமார் ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். பிறகு அறிவுரை கூறி அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மாங்காடு போலீஸாரை, காவல்துறை உயரதிகாரிகள், பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். மேலும், ஆற்றில் சிக்கிக் கிடந்த முகம்மது ரபிக் காரை தீயணைப்பு வீரர்கள் நேற்று மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தண்ணீர் அதிகமாகச் சென்றதால் காரை மீட்க முடியவில்லை. வெள்ளம் குறைந்த பிறகு, காரை மீட்கும் பணி நடைபெறும் என போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT