

சென்னை: சென்னையில் 3-வது நாளாக பல இடங்களில் வெள்ளநீர் தேக்கம் நீடித்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஆயிரம் உணவு பொட்டலங்களை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது. நிவாரண முகாம்களில் 306 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகரப் பகுதியில்நவ.29-ம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக 192 இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. மேற்கு மாம்பலம், கொரட்டூர், கொளத்தூர் போன்ற பகுதிகளில்வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துபொதுமக்கள் அவதிக்குள்ளா யினர். மாநகராட்சி சார்பில் 89 மோட்டார்கள் மூலம் தொடர்ந்து மழைநீர் வடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று மாலை நிலவரப்படி 3-வது நாளாக 64 இடங்களில் மழைநீர் தேங்கியது. மற்ற இடங்களில்வெள்ளநீர் வடிந்தது. பாதிக்கப்பட்டபகுதிகளில் 306 பேர் நிவாரணமுகாம்களில் தங்கவைக்கப்பட்டுள் ளனர். வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் இதுவரை 10 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப் பட்டுள்ளன. கொரட்டூர் டிஎன்எச்பி காலனி 2-வது தெருவில் 3-வது நாளாக நேற்று முழங்கால் அளவு மழைநீர்தேங்கியிருந்தது. இதனால், அந்ததெருவுக்குள் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர். அப்பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவிலும் வெள்ளநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
வடபழனி, கங்கையம்மன் காலனி 2-வது தெரு முழுவதும்நேற்றும் வெள்ளநீர் தேங்கியிருந்தது. இதில் வீட்டுக்குள் மழைநீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். மேலும், மழைநீரைதங்களிடம் உள்ள மோட்டார்களை வைத்தே அவர்கள் வெளி யேற்றினர். மேற்கு மாம்பலம் ஈஸ்வரன் கோயில் தெருவில் இருக்கும் கடைகளுக்குள் புகுந்த மழைநீரை கடை உரிமையாளர்கள் வெளியேற்றி வருகின்றனர். சுப்பிரமணியன் நகர்1-வது தெரு, தியாகநகரின் அஜீஸ் நகர் பிரதான சாலை பகுதிகளிலும் வெள்ள நீர் வடியவில்லை. மேலும், போரூர் முதல் கோடம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், பழுதான சாலை பள்ளங்களில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.
புரசைவாக்கம் தாக்கர் தெரு, பொன்னப்பா தெரு, லெட்டாங்ஸ் சாலை, ஓட்டேரி பிரிக்ளின் சாலை ஆகிய பகுதிகளிலும் மழைநீர் வடியாமல், அதில் கழிவுநீரும் கலந்து தூர்நாற்றம்வீசியதால் பொதுமக்கள்மிகுந்த சிரமத்துக்குள்ளா யினர். ஓட்டேரி செல்லப்பா முதலி தெரு கழிவு நீரால் நிரம்பி வழிந்தது. மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு கழிவுநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி யிருந்தது. வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் வெள்ளம் வடிந்தாலும் பல தெருக்களில் சாக்கடை கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
புறநகர் பகுதிகள்: பருவமழையால் கிழக்கு தாம்பரம் முதல் வேளச்சேரி வரையிலான சாலைகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, சேலையூர் முதல் சந்தோஷபுரம் வரையிலான சாலைகள், பள்ளிக்கரணை, நாராயணபுரம் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆவடி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் வீடுகளில் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்ததால் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்தனர். அதேபோல், மேடவாக்கம் பாபு நகர் 4 பிரதான சாலைகளில், 3-வதுபிரதான சாலையில் மழைநீர், கழிவுநீருடன் கலந்து செல்கிறது. வீரபத்திரன் நகர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் உள்ள தெருக்களில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மேடவாக்கம், சித்தாலப் பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ளபூங்காக்களில் மழைநீர் அதிகள வில் தேங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.