Published : 02 Dec 2023 06:10 AM
Last Updated : 02 Dec 2023 06:10 AM

மரக்காணத்தில் கடல் சீற்றம் அதிகரிப்பு - புதுச்சேரியில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டம் தந்திராயன்குப்பத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் மீன்பிடி படகுகளை வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர். படம்: எம்.சாம்ராஜ்

விழுப்புரம்/புதுச்சேரி: வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் விழுப்புரம் மாவட்டம் மரக் காணம் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. ராட்சத அலைகள் எழும்பி பல அடி தூரம் தரைப்பகுதி நோக்கி வருகிறது. மீனவர்கள் கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் சென்று வைத்துள்ளனர்.

புயல்சின்னம் காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் மரக்காணம் பகுதியில் உள்ள 19 கிராம மீனவர்களும் மறு உத்தரவு வரும் வரையில் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக மரக்காணம் பகுதியில் உள்ள சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. ஏற்கெனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 50 பேர் மரக்காணம் வந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலைத் துறையினர் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மணல் மூட்டைகள், இயந்திர வாள், கடப்பாறைகள், ஜேசிபிஇயந்திரம் போன்றவைகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

புதுச்சேரி: புதுவை மீன்வளத்துறை, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனஎச்சரிக்கை விடுத்துள்ளது. மீன்வளத் துறை மூலம் மீனவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப் பட்டுள்ளது. வானிலை எச்சரிக்கை அறிவிப்பை மீறி கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் படகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என புதுவை மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலில் புயல் உருவாகியுள்ளதை தொடர்ந்து புதுவை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நாளை மறுநாள் விடுமுறை: புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி,காரைக்கால், ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் நாளை மறுநாள் (டிச.4) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x