Published : 05 Jan 2018 09:22 AM
Last Updated : 05 Jan 2018 09:22 AM

ரூ.20 டோக்கன்களுக்கு விலை போயுள்ளனர்: ஆர்.கே.நகர் மக்கள் மீது கமல் தாக்கு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.20 டோக்கன்களுக்கு மக்கள் விலை போயுள்ளனர் என்று நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் குறித்தும், தான் அரசியலில் நுழைவது குறித்தும் கமல் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வந்தார். கடந்த சில வாரங்களாக ‘விஸ்வரூபம் 2’ படத்தின் பணிகளில் தீவிரம் காட்டியதால் அவர் அரசியல் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அரசியல் கருத்துகளை கூறி வருகிறார்.

இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்துகள் வருமாறு:

ஆர்.கே. நகரில் தேர்தலை ஒட்டி நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் வெளிப்படையாகவே நடந்தது. இப்படி விலைக்கு வாங்கப்பட்ட வெற்றியை ஊழல் என்று சொல்லிவிட முடியாது. இது ஊரறிய நடந்த குற்றமாகவே நான் கருதுகிறேன். இவ்வளவு வெளிப்படையாக நடக்கும் குற்றத்துக்கு, மக்களும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பதுதான் வருத்தம் அளிக்கிறது. இங்கே ‘இவைதாம் வெற்றிக்கான வியூகங்கள்’ என்று பட்டியல் போட்டுப் பாராட்டுகிறார்கள். இந்த அவமானம் கொண்டாட்டமாக மாறுகிறது. இதுதான் புதிய புரட்சி என்றால், இன்றைய தேதி வரையிலும் நாம் ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்திலேயே வாழ்ந்திருக்கலாமே! எதற்கு அந்தப் பழைய சுதந்திரப் புரட்சி?

சென்னை வெள்ளத்தின்போது மக்களாகிய நீங்கள் எல்லா பக்கமும் ஓடி ஓடி உதவிகளை செய்தீர்கள். அப்படிப்பட்ட நீங்களே இன்று ரூ.20 டோக்கன்களுக்கு விலைபோகவும் செய்துள்ளீர்கள். இது பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம். அதுவும் திருடனிடம் பிச்சை எடுப்பதுபோன்ற ஒரு கேவலம் எங்கேயாவது நடக்குமா? உங்களிடத்தில் மனிதம் இல்லாமல் இல்லை. ஆனால், வறுமை அதை மறைக்கிறது. உங்களின் வறுமையை இல்லாமல் செய்ய, உங்களின் நேர்மையான வாக்குகள்தான் ஒரே ஆயுதம். நீங்கள் ஒவ்வொருவரும் நேர்மையாகச் செலுத்தும் வாக்குகளே நீண்டநாள் நிலைத்த பலனைத் தரும். இதை உணர்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’’ இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தினகரன் எதிர்ப்பு

கமலின் இந்த கருத்து குறித்து நிருபர்களிடம் கூறிய டிடிவி தினகரன், “ஆர்.கே.நகரில் பணம் தான் வெற்றி பெற்றுள்ளது என கூறுவதன் மூலம் அந்த தொகுதி மக்களை கமல்ஹாசன் கொச்சைப்படுத்துகிறாரா? பணம் பட்டுவாடா என செவி வழி செய்தியை வைத்து கமல் கூறுவது, அவரது தரத்தை காட்டுகிறது. மக்கள் தான் இந்த வெற்றியை முடிவு செய்கிறார்கள். வெற்றி பெற்றவர்களை குறை சொல்வதாக கூறி அவர் மக்களை சாடுகிறார். எனவே, இது அரசியல் களம் என்பதை அவர் புரிந்துக் கொண்டு பேச வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x