Published : 02 Dec 2023 05:37 AM
Last Updated : 02 Dec 2023 05:37 AM
நாகப்பட்டினம்/ மயிலாடுதுறை/ காரைக்கால்: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுப்பெற்றுள்ளது. இது, புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னைவானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘மிக்ஜாம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாகை துறைமுகத்தில் நேற்று மதியம் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும், தொடர் மழையால் கடல் சீற்றமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடல் சென்றுமீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், நாகை மாவட்ட மீனவர்கள் நேற்று 3-ம் நாளாக மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு செல்லவில்லை. மாவட்டத்தில் 25 மீனவக் கிராமங்களில் 1,500 விசைப்படகு மற்றும் 5,000 ஃபைபர் படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை விட்டுவிட்டு மிதமான மழைபெய்தது. மாவட்டத்தில் நேற்றுகாலை வரை பெய்த மழையளவுவிவரம்(மி.மிட்டரில்): வேளாங்கண்ணி 55.20, தலைஞாயிறு 54.80, திருக்குவளை 40, திருப்பூண்டி 39.80, நாகப்பட்டினம் 28.30,கோடியக்கரை 22.80, வேதாரண்யம் 19.80.
தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா நெற்பயிர் சாகுபடி வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதேபோல, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களின் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து விட்டுவிட்டு மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், செம்பனார்கோவில், தரங்கம்பாடி, சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் விட்டுவிட்டு மிதமான மழை பெய்த நிலையில், நேற்று காலை 11 மணிக்கு பின்னர் மாலை வரை மீண்டும் மிதமான மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் 2.30 மணி வரை பதிவான மழையளவு (மி.மீட்டரில்): மயிலாடுதுறை 42, செம்பனார்கோவில் 29.30, தரங்கம்பாடி 23, கொள்ளிடம் 18.20, சீர்காழி 18, மணல்மேடு 15.40. காரைக்கால் மாவட்டத்தில் வரிச்சிக்குடி, கோட்டுச்சேரி, காரைக்கால், திருப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழை பெய்தது. காரைக்காலில் நேற்று காலை 8.30 மணியுடன் 18.5 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT