Published : 08 Jan 2018 09:01 AM
Last Updated : 08 Jan 2018 09:01 AM

போக்குவரத்து தொழிலாளர்கள் 4-வது நாளாக போராட்டம்: சென்னையில் 60% பஸ்கள் பணிமனையில் முடக்கம் - மின்சார, மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதியது

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால், சென்னையில் 4-வது நாளாக நேற்று குறைந்த அளவிலான மாநகர பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் மின்சார, மெட்ரோ ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் சில தொழிலாளர்கள் நேற்று பணிக்கு திரும்பியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 3 நாட்களுடன் ஒப்பிடும்போது, கூடுதலாக 10 சதவீதம் என சுமார் 40 சதவீத மாநகர பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. இருப்பினும், முழு அளவில் பஸ்கள் இயங்காததால், மத்திய பணிமனை, வடபழனி, தியாகராய நகர், பூந்தமல்லி, குரோம்பேட்டை, தாம்பரம், ஆலந்தூர், திருவான்மியூர், அயனாவரம், வியாசர்பாடி, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பணிமனைகளில் 60 சதவீத மாநகர பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி, அம்பத்தூர், பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 100-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் நேற்றும் இயக்கப்பட்டன. பயணிகளிடம் 5 கிலோ மீட்டருக்கு ரூ.5, 10 கிலோ மீட்டருக்கு ரூ.10, 20 கிலோ மீட்டருக்கு ரூ.20 என கட்டணம் வசூலிக்கப்பட்டது.

மின்சார ரயில்களில் கூட்டம்

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால், சென்னை ரயில் கோட்டத்தில் நடத்தவிருந்த பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டு, அலுவலக நாட்களில் இயக்குவதுபோல், 670 மின்சார ரயில் சர்வீஸ்களும் இயக்கப்பட்டன. இதனால், மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட 30 சதவீதம் அதிகரித்திருந்தது. இதேபோல், மெட்ரோ ரயில்களில் கடந்த 4 நாட்களாக தினமும் சராசரியாக பயணம் செய்வோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்தில் இருந்து 31 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்றும் வழக்கத்தை விட அதிகமாக ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. ஷேர் ஆட்டோக்களில் ஆரம்ப கட்டணம் ஒருவருக்கு ரூ.20 எனவும், ஆட்டோக்களில் ஆரம்ப கட்டணம் ரூ.150 முதல் ரூ.200 வரையிலும் வசூலிக்கப்பட்டது. பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் வேறு வழியின்றி கூடுதல் கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் பயணம் செய்தனர்.

வெளியூர் பஸ்கள்

கோயம்பேட்டில் இருந்து வழக்கமாக 1,800 முதல் 2,000 அரசு பஸ்கள் மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும். ஆனால், தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக பஸ் சேவை முடங்கியுள்ளது. பஸ்கள் பணிமனைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன.

இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “வழக்கமாக ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து வெளியூருக்கு பயணம் செய்வது மிகவும் குறைவாகத்தான் இருக்கும். மேலும், தொழிலாளர்களின் போராட்டம் தொடர்வதால், மக்கள் வெளியூர் பயணத்தை குறைத்துக் கொண்டனர். தேவைக்கு ஏற்ப வெளியூருக்கு விரைவு பஸ்களை ஓட்டி வருகிறோம். இன்று (நேற்று) 30 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.’’ என்றார்.

மீன் வியாபாரிகள் அவதி

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மீன் வாங்குவதற்காக ஏராளமான சில்லறை மீன் வியாபாரிகள் காசிமேடு மீன் சந்தைக்கு வந்திருந்தனர். அவர்கள் வழக்கமாக மீன்களை வாங்கிக்கொண்டு பேருந்துகளில் சென்று குறுகிய தெருக்களில் மீன் விற்பார்கள். தற்போது பேருந்துகள் இயக்கப்படாததால், அவர்களுக்கு பேருந்துகள் கிடைக்கவில்லை. ஆட்டோ ஓட்டுநர்கள் தற்போது பிசியாகிவிட்டதால், ஆட்டோவும் கிடைக்காமல், வாங்கிய மீன்களை எடுத்துச்செல்ல முடியாமல் சில்லறை மீன் வியாபாரிகள் அவதிப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x