Published : 01 Dec 2023 05:59 AM
Last Updated : 01 Dec 2023 05:59 AM
சென்னை: செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி நேற்று ஆஜரானார். அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடந்தது.
தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி. இவர் கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிம வளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக 2.65 லட்சம் லோடு லாரி செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் பொன்முடி மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த ஜூலை 17-ம் தேதி, சென்னை, விழுப்புரம் உட்பட அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். 13 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். பொன்முடி கனிம வளத்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது மகன், உறவினர்கள் என பினாமி பெயர்களில் உரிமம் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோதமாக செம்மண் அள்ளியதில் கிடைத்த வருமானத்தை பினாமி கணக்குகளுக்கு மாற்றியதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனங்களின் கணக்குகளுக்கு பணப்பரிவர்த்தனை நடைபெற்றிருந்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக, அன்றைய தினம், பொன்முடியை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று, கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டு, அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். தொடர்ந்து 2 முறை அவரை அலுவலகத்துக்கு அழைத்து அதிகாரிகள் விசாரித்தனர். இந்நிலையில், மீண்டும் விசாரணைக்கு நவ.30-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதனைத்தொடர்ந்து, பொன்முடி நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காலை 10.30 மணி அளவில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரது வழக்கறிஞர்கள் உடன் வந்திருந்தனர்.
ஏற்கெனவே, கடந்த 2 முறை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடி விசாரணைக்கு ஆஜரான நிலையில், 3-வது முறையாக நேற்று ஆஜரானார். அப்போது, அமலாக்கத் துறையினரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை பொன்முடி சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். கடந்த முறை பொன்முடியிடம் கேட்ட கேள்விகளையும் மீண்டும் அமலாக்கத் துறையினர் அவரிடம் கேட்டனர். அப்போது, அவர் அதே பதிலை அளிக்கிறாரா? அல்லது வேறு பதில் அளிக்கிறாரா? என்று ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாகவும், வெளிநாடுகளில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளை அவரிடம் எழுப்பினர். அமைச்சர் பொன்முடியிடம் கேட்ட கேள்விகளை வீடியோவாக அமலாக்கத்துறையினர் பதிவு செய்தனர். தொடர்ந்து, மதியம் 3.30 மணி வரை விசாரணை நடந்தது. இதையடுத்து 4 மணி அளவில் விசாரணை முடிந்து அவர் வீடு திரும்பினார். 5 மணி நேரம் நடந்த விசாரணையின் அடிப்படையில், தயார் செய்யப்பட்ட அறிக்கையை, டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி, அதன்பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT