Published : 01 Dec 2023 04:00 AM
Last Updated : 01 Dec 2023 04:00 AM

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: சென்னையி்ல் நடைபெறவுள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

சென்னை தீவுத் திடலைச் சுற்றியுள்ள வட்ட வடிவ சாலை மார்க்கத்தில் தெற்காசியாவில் முதன் முறையாக இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் ஃபார்முலா 4 கார் பந்தயம், தமிழக அரசு சார்பில் டிச.9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படவுள்ள இந்த ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடை விதிக்கக் கோரியும், இந்த பந்தயத்தை இருங்காட்டுக்கோட்டையில் உள்ள பந்தயத் தளத்தில் நடத்தக் கோரியும் சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த டாக்டர் ஸ்ரீஹரிஷ் மற்றும் லூயிஸ் ராஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நர்மதா சம்பத், ‘‘ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை உள்ளபகுதியில் இந்த கார் பந்தயம் நடப்பதால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும்’’ என வாதிடப்பட்டது. மேலும்,‘‘ராணுவம், கடற்படை மற்றும் துறைமுகம் ஆகியவற்றின் அன்றாட பணிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன் இதற்கான முன் அனுமதியும் பெறவில்லை’’ என குற்றம்சாட்டினார்.

அதையடுத்து நீதிபதிகள், இந்த கார் பந்தயத்துக்காக பெற்ற முன் அனுமதிக்கான ஆவணங்களை தாக்கல் செய்யும் படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர். அதைத்தொடர்ந்து, இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, இந்த பந்தயத்துக்காக பல்வேறு துறைகளிடமிருந்து பெறப்பட்ட முன் அனுமதிக்கான ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

மேலும், இந்த கார் பந்தயம் டிச.9 மற்றும் 10-ம் தேதிகளில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே நடத்தப்படும்.அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்படும். ராணுவம், கடற்படை மற்றும் துறைமுக அதிகாரிகளுடன் ஏற்கெனவே ஆலோசிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த கார் பந்தயத்துக்கு ராணுவம், துறைமுகம், கடற்படை ஆகியவற்றின் அனுமதி அவசியம் தேவை என்றனர்.

ஏற்கெனவே ராணுவம், கடற்படை, துறைமுகம் அனுமதி வழங்கியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பான எழுத்துப் பூர்வமான அனுமதியைப் பெற்று, இன்று (டிச.1) தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x